பக்கம்:மூவரை வென்றான்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மூவரை வென்றான்/வெள்ளையத்...


நிலாக் கிளம்புவதற்குள் பொன்னியைக் கிளப்பிக்கொண்டு. கொங்குமலைக் குகைக்குக் கொண்டு போய்விடவேண்டியது. இன்னும் சிறிது நேரத்தில் நாம் கிளம்ப வேண்டும்.”

வெள்ளையத் தேவன் சம்மதித்தான். சிறிது நேரத்தில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மாமனும் அவனும் புறப்பட்டார்கள்.

“அம்மா, மீனாட்சி! நானும் உன் அண்ணனும் மாரி’ யம்மன் கோவில் திருவிழா விஷயமாகக் கொஞ்சம் இப்படி வெளியே போய்விட்டு வருகிறோம். வர நேரமானாலும் ஆகலாம். நீயும் மதனியும் படுத்துக்கொள்ளுங்கள். வீணாக மனசை அலட்டிக்கொள்ள வேண்டாம். உன்னைப் புருஷன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு.” போகும்போது கிழவர் மீனாட்சியிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

இருளில் வேகமாக நடந்து, ஊர் எல்லையிலுள்ள ஓர் ஆலமரத்தடியில் வந்து நின்றனர், வெள்ளைத்தேவனும் அவன் மாமனும். அங்கே மரத்தின் விழுதுகளில் இரண்டு குதிரைகள் முன்னேற்பாடாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு கரிசல் குளத்தை. நோக்கிச் சென்றனர்.

கரிசல் குளம் ஊர் எல்லையை அடைந்ததும் கிழவர் குதிரையை நிறுத்தினார். வெள்ளைத்தேவன் கையில் ஒரு பச்சிலையைக் கொடுத்துவிட்டு, அவர் கூறினார்:

“வெள்ளை! இந்தப் பச்சிலையை மூக்கருகிலே காட்டினால், யாரும் பிரக்ஞை தவறிவிடுவார்கள் ஜாக்கிரதை! காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இங்கே பொன்னியோடு வந்து சேர். அதற்குள் நிலா, உதயமாகிவிடும்! நேரே மலைக் குகைக்குப் போய்விடலாம்...”

வெள்ளையத் தேவன் தன் குதிரையையும் ஊர் எல்லை யிலேயே நிறுத்திவிட்டு மாமன் கொடுத்த பச்சிலையோடு கால்நடையாக ஊருக்குள் நுழைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/64&oldid=508094" இலிருந்து மீள்விக்கப்பட்டது