பக்கம்:மூவரை வென்றான்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூவரை வென்றான்

மதுரையிலிருந்து தென்காகி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுப்பட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின்மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு-’ என்று கறுப்புத் தார் பூசிய மரச்சட்டத்தில் வெள்ளை வார்னிஷால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும்.

நான் அடிக்கடி இந்தச் சாலை வழியே பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவன். ஏதோ ஒரு கிராமம் மேற்கே ஒன்றரை மைலில் இருப்பதாகவும், அந்தக் கிராமத்தின் பெயர்தான் அது என்றும் முதல் முதலாக நான் விசாரித்தபோது அந்த ஊரைப்பற்றி ஒரு அன்பரிடம் அறிந்து கொண்டேன்.

பெயரைப் படித்தால் அந்தப் பெயர் அப்படிப்பட்ட ஒரு குக்கிராமத்திற்கு ஏற்பட்டிருப்பதில் ஏதாவதொரு காரணமோ, கதையோ அடங்கியிருக்க வேண்டுமென்று நம்பினேன். நான். ‘மூவரை வென்றான்-’ என்ற அந்தப் பெயர் அமைந்திருக்கிற விதத்திலிருந்து, பூர்வ சரித்திர நிகழ்ச்சியால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் என்றுகூடத் தோன்றியது. மேற்படி சாலையில் பிரயாணம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் மனதைக் கவர்ந்து கற்பனையை யும் சிந்தனையையும் கிளறச் செய்கிற அளவுக்கு ‘மூவரை வென்றான்’ முக்கியத்துவம் பெற்றுவிட்டான்.

‘அதிர்ஷ்டம்’ எப்படி வந்து வாய்க்கிறது. பாருங்கள்! ஒருநாள், நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த பஸ் என் மனோபீஷ்டத்தை நிறைவேற்ற விரும்பியோ என்னவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/7&oldid=505342" இலிருந்து மீள்விக்கப்பட்டது