பக்கம்:மூவரை வென்றான்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

77

கையில் வாங்கிக்கொண்டு வேலைக்காரர்கள் அந்த ஆளைப் புதரிலிருந்து இழுத்துப் போடுமாறு கட்டளையிட்டான் வெள்ளையத்தேவன். வேலைக்காரர்கள் புதரிலிருந்து அந்தப் பருத்த சரீரத்தை வெளியே தூக்கிக்கொண்டு வந்து போட்டார்கள்.

தீவட்டி வெளிச்சத்தில் அந்த ஆளின் முகத்தைப் பார்த்த பண்ணைத்தேவர், ஏக காலத்தில் வியப்பும் ஆத்திரமும் தொனிக்கும் குரலில், “அட நன்றிகெட்ட பயலே? நீதானா நல்லவனைப்போல நடித்து என் வீட்டில் ஒரு மாதம் வேலைக்கு இருந்து ஓடிப்போன இரகசியம் இப்போதல்லவா புரிகிறது? ‘வெங்கி நாயக்'கனின் சுயரூபம் இதுதானா? நீ கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த உளவாளியா?” என்று இரைந்தார்.

மாமனும் வெள்ளையத்தேவனும் ஒருவாறு விஷயத்தைப் புரிந்துகொண்டனர். கொள்ளைக்காரர்கள் தங்கள் ஆளையே தேவர் வீட்டில் வேலை செய்யவிட்டு உளவறிந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க, அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கீழே கிடந்த சரீரத்தில் நீலம் பாரித்து, நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. மார்பிலே கையை வைத்துப் பரிசோதித்த மாமன், உதட்டைப் பிதுக்கினார், உடல் ஜில் லிட்டுப் போயிருந்தது.

“புதருக்குள் இவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபோது, ஏதோ விஷ ஜந்து இவனைத் தீண்டியிருக்கவேண்டும். ஆள் நாக்கைப் பிளந்துவிட்டான்” என்று கையை விரித்துக் காட்டியபடி தலை நிமிர்ந்தார்.

இதன்பின், “பாழுங்கிணற்றிற்குள்ளே கிடக்கும் உடல்களோடு வெங்கி நாயக்கனின் உடலையும் சேர்த்து யாவற் றையும் பொழுது விடிவதற்குள் அப்புறப்படுத்தி அடக்கம் செய்துவிடவேண்டும்” என்று வேலைக்காரர்களுக்குக் கூறி விட்டு, அவர்கள் மூவரும் மாளிகைக்குள் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/79&oldid=508109" இலிருந்து மீள்விக்கப்பட்டது