பக்கம்:மூவரை வென்றான்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மூவரை வென்றான்

போகும்போது வெளியே நின்ற குதிரையையும் இழுத்துக் கொண்டுபோய்ப் பண்ணைத் தேவரின் குதிரை லாயத்திலுள்ள குதிரைகளோடு கட்டிப் புல்லை அள்ளிப்போட்டான் வெள்ளையத்தேவன்.

“நாளை நண்பகலுக்குள் மீனாட்சியின் கணவன் தானே வலுவில் கபிலக் குறிச்சிக்குப் போய் அவளைப் பணிந்து அழைத்துக்கொண்டு வரச்செய்யவில்லையானால், என்பெயர் பண்ணைத் தேவனில்லை! நீங்கள் இருவரும் கவலையின்றிக் குறை இரவையும் இங்கேயே ஒய்வெடுத்துக் கொண்டு அமைதியாகக் கழியுங்கள்” என்றார் பண்ணைத்தேவர். அவர் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், மாமனும் வெள்ளையனும் அங்கேயே மாளிகையில் தங்கினர்.

ஆனால், இரவின் எஞ்சிய பகுதியில் அந்த மாளிகையில் அன்று எவருமே உறங்கவில்லை. உறங்க முயன்றார்கள், ஆனால், உறக்கம் வந்தால்தானே!

முதல் நாளிரவில் பண்ணைத் தேவர் கூறிய வாக்குப்படி மீனாட்சியை அவள் கணவனே நண்பகலுக்குள் கபிலக்.குறிச்சி சென்று அழைத்து வருமாறு செய்துவிட்டார். சுரிசல்குளம் ஊரில் அவருக்கிருந்த செல்வாக்கு இந்தக் காரியத்தைத் துரிதமாக நிறைவேற்றியது.

மீனாட்சிக்கு நல்வாழ்வு திரும்பிவிட்டதில் பெரிதும் மகிழ்ந்த மாமனும் வெள்ளையத் தேவனும், அதற்கு மூல காரணமாக இருந்த பண்ணைத் தேவருக்கு நன்றி கூறிவிட்டு ஊருக்குக் கிளம்பச் சித்தமானார்கள்.

ஆனால், பெரியவரே! நீங்களும் தம்பியும், இப்போது போகவேண்டாம். உங்களிடம் நான் தனியே பேசவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது” என்று கூறி, மாமனையும் தேவனையும் பண்ணைத் தேவர் தடுத்துவிட்டார்.

மாமனைமட்டும் தனியே அழைத்துச் சென்று, அவரிடம் ஒரு வியக்கத்தக்க செய்தியைப் பிரஸ்தாபித்தார் பண்ணைத் தேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/80&oldid=508110" இலிருந்து மீள்விக்கப்பட்டது