பக்கம்:மூவரை வென்றான்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மூவரை வென்றான்

பொழுதுவரை, வேட்டை சுவாரஸ்யமாக நடந்தது. சகாக்கள் மூலைக்கொருவராக அடர்ந்த மலைப் பகுதியில் தனித்தனியே பிரிந்து சென்றுவிட்டனர்.

வெள்ளையத் தேவனுக்கு அந்த மலையில் சுற்றிக் கொண்டிருந்த பளிஞன் ஒருவன் மிகவும் உதவியாக இருந்தான்.

ஒருமுறை பராக்குப் பார்த்துக்கொண்டே, தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த மான் ஒன்றின்மேல் வில்லை நாணேற்றிய அவன், கீழே இருந்த பாறை தடுக்கி விழுந்து விட்டான். அப்படி அவன் விழுந்தபோதுதான், அந்தப் பளிஞன் ஒரு புதரிலிருந்து அவனைத் தூக்கிவிடுவதற்காக வந்தான். தூக்கிவிட வந்தபோது, அவன் வெள்ளையனின் வலது காதில் எதையோ தடவினான், “அடேடே! காதில் எறும்பு நுழைந்துவிட்டதே!” என்று கூறியவாறே, கையால் எதையோ எடுத்தெறிவதுபோல எடுத்தும் எறிந்தான். இதன்பின் வெள்ளையத் தேவன் அவனை, “நீ என்னோடு வர வேண்டிய அவசியம் இல்லை! உன் உதவிக்கு நன்றி. எனக்கு வேட்டையாடத் தெரியும்” என்று கூறித் தடுத்தும் கேட்காமல் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தான் அந்தப் பளிஞன். “சரி! வந்தால் வந்துவிட்டுப் போகிறான். நமக்கென்ன!” என்று பேசாமல் இருந்துவிட்டான் வெள்ளையத் தேவன்.

கதிரவன் தலைக்கு நேரே வந்து நண்பகல் ஆனபோது வேட்டையை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளக் கருதிய வெள்ளையத் தேவன், சகாக்களைத் தேடி நடந்தான். அப்போது அந்தப் பளிஞனும் அவனையே பின்பற்றி வந்தான்.

“ஏய்! நீ பேசாமல் இங்கிருந்து போகிறாயா! உன் முதுகுக்கு ஏதாவது கேட்கிறதா? எதற்காக என் பினனாலேயே வருகிறாய்?” என்று கூறிக்கொண்டே வில்தண்டை அந்தப் பளிஞனை நோக்கி ஓங்கினான் வெள்ளையன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/84&oldid=508113" இலிருந்து மீள்விக்கப்பட்டது