பக்கம்:மூவரை வென்றான்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

87

பாப்பையன் அப்படியே வெள்ளையத் தேவனின் ரத்தத்தைத் தொட்டு வணங்கிச் சத்தியம் செய்தான்.

“நான் சொல்வதை, இவனுக்குச் செய்து கொடுக்க நீங்கள் பொறுப்பு! எனவே, நீங்களும் இப்படியே ஒரு சத்தியம் செய்யுங்கள்"—என்று தன் சகாக்களையும் வேண்டிக்கொண்டான் வெள்ளையத் தேவன்.

அவர்களும் அப்படியே ரத்தத்தைத் தொட்டு சத்தியம் செய்தார்கள், இப்படி இரு சாரரும் சத்தியம் செய்து முடிந்தபின், “நண்பர்களே! எல்லோரும் இப்போது கவனமாக நான் கூறுவதைக் கேளுங்கள்” என்று தொடங்கி வெள்ளையத்தேவன் கூறலானான்:—

“தலைக்கட்டுக்களே! கவனித்துக் கேளுங்கள். இது என் வேண்டுகோளின் முக்கியமான அம்சம். பாப்பையா! நீயும் கேள். பண்ணைத்தேவருடைய செல்வ வளமே பாப்பையனுக்கும் எனக்கும் நேரடியாகப் பகையை உண்டாக்கிவிட்டது. இப்போதோ பொன்னியை மணம் செய்து கொண்டதன் மூலமாக அந்தச் செல்வத்துக்கு நான் உரிமையாளன் ஆகிவிட்டேன். ஆனால், இதோ இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய உலக வாழ்க்கையே முடியப்போகிறது. நீங்கள் போட்டிருக்கும் பச்சிலை மருந்தெல்லாம் இதற்குப் பயன்படாது. ஏனென்றால், பாப்பைய நாயக்கன் விட்ட அம்பு என் இதயத்தின் முக்கியமான இரத்தக்குழாயைத் துளைத்துவிட்டது. இனி நான் பிழைப்பது நடக்க முடியாத காரியம். எனவே உங்களிடம் இதை வேண்டுகின்றேன்.

பொன்னி மூலம் என்னைச் சேர்ந்திருக்கும் பண்ணைத் தேவரின் சொத்துக்களையும், அவருடைய கரிசல்குளத்துத் தோட்ட மாளிகையையும் நாளையிலிருந்து பாப்பையனுக்கு உரிமையாக்க வேண்டும். அதைச் செய்வதாகத் தலைக்கட்டுக்களாகிய நீங்களும், ஏற்றுக்கொள்ளப்போவதாகப் பாப்பையனாகிய இவனும் என் ரத்தத்தைத் தொட்டுச் சத்தியம் செய்துவிட்டீர்கள். இனி நீங்கள் மறுக்க முடியாது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/89&oldid=508118" இலிருந்து மீள்விக்கப்பட்டது