பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மூவர் தேவாரம் - புதிய பார்வை பிறந்தருளியதுமான திருவெருக்கத்தம் புலியூர் என்ற திருத்தலத் திற்கு வந்து அவ்வூர் திருக்கோயிலை வலம் வந்து ‘எம்பெருமானே, தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய இன்னிசையினை எங்களுக்கு உணர்த்தியருளுதல் வேண்டும்' என இறைஞ்சி விண்ணப் பித்தனர். அந்நிலையில் 'திருநீலகண்டர் பெரும்பாணர் மரபிலே பிறந்த பெண்ணொருத்திக்கு இசைத் திறனை அளித்துள்ளோம்' என்ற அருள் வாக்குத் தோன்றியது. இதனைக் கேட்ட இருவரும் அப்பாடினியாரை அழைத்து வந்து திருக்கோயில் வாயிலில் நிறுத்தினர். அவ்வளவில் 'இவளைத் தில்லைக்கு இட்டுச் சென்று அங்குத் தேவாரத்திருப்பதிகங்களுக்குப் பண்ணடைவு வகுக்கக் கடவீர்' என மீண்டும் ஒர் அருள் மொழி எழுந்தது. அதனைக் கேட்ட சோழ மன்னனும் நம்பியாண்டார் நம்பியும் அவ்வம்மை யாரைத் தில்லையம்பல முன்றிலுக்கு அழைத்துவந்து தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண் வகுக்கச் செய்தனர். அங்ங்னமே தேவாரப் பண்களுக்குரிய கட்டளைகள் வரையறுக்கப் பெற்றன. இறைவன் திருவருள் துணை கொண்டு அம்மையார் வகுத்த இசை மரபே தேவார திருப்பதிகங்களுக்குப் பொருந்திய தெய்வ இசையாகத் தென்னாட்டில் சிறப்புற்று வளர்வதாயிற்று. இசைத் துறை ஆசிரியர்களும் மாணாக்கர்களும் இந்த வரலாற்றை மனத் தில் இருத்தினால் அது அவர்களது இசையாராய்ச்சிக்குப் பெருந் துணையாக இருக்கும்; அடிப்படையாகவும் அமையும். நாலாயிரத் தொகுப்பு வரலாறு: திருமுறைத் தொகுப்பைப் போலவே நாலாயிரத் தொகுப்பும் அமைந்துள்ளமை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. அதனையும் ஈண்டு உங்கள் கவனத் திற்குக் கொண்டு வருதல் சாலப் பொருத்தமாக அமையும். ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் மன்னிய பேரிருள் நீங்கி ஊரும் நாடும் உலகமும் அவன் தன் பேரும் தார்களுமே பிதற்றும்படி செய்து அந்தமில் பேரின்பத்தை அளித்துக் கொண்டு வந்தன. இஃது இவ்வாறு இருக்க இம்மைப் பேற்றையே