பக்கம்:மேனகா 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாமற் போனாயோ கண்மணியே?

91

கிடக்கிறதோ? என் மாணிக்கக்கட்டி எங்கு மறைந்து போய்விட்டதோ? என் பஞ்சவருணக் கிளி எந்தக் குளத்தில் மிதக்கிறதோ? ஐயோ! என் வயிறு பற்றி எரிகிறதே! ஈசுவரா! உன் இடிகளை அனுப்பி அந்தப் பாழாய்ப்போன முண்டைகளின் மண்டையை உடைக்க மாட்டாயா? தெய்வமே! உன் சக்கராயுதத்தை அனுப்பி அந்தக் கொடிய வஞ்சகரின் நெஞ்சைப் பிளக்கமாட்டாயா?” என்று சரமாரியாக எதுகை மோனைகளோடு பிதற்றிச் சொற்களை வாரி வாரி வீசினாள். அரற்றிப் பொருமினாள். அவளுடைய வதனம் கொல்லன் உலையைப்போலக் காணப்பட்டது. பழுக்கக் காய்ந்த இரும்பிலிருந்து தீத்திவலைகள் தெறித்தலைப்போலக் கோவைப் பழமாய்ச் சிவந்த கண்களினின்று தீப்பொறி பறந்தது. அவள் அடிக்கடி விடுத்த நெடுமூச்சு இருட்டைத் துருத்திக்கொண்டு காற்றை விடுதலைப்போலிருந்தது. வாயின் சொற்கள் சம்மட்டி அடிகளைப் போல, “மூச்சுவிடுமுன்னே முன்னூறு, நானூறு ஆச்சென்றால் ஐந்நூறு மாகாதா” என்றபடி செத்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்துகொண்டிருந்தன. சொற்களின் கருத்திற் கிணங்க கைகளையும் உடம்பையும் அசைத்து அபிநயங் காட்டி எண்ணெயில் தை தை யென்று குதிக்கும் அப்பத்தைப்போல நிலைகொள்ளாமல் ஆடித் தவித்தாள். வாயில்லா ஜெந்துக்களான பாத்திரங்கள் உணவுப்பொருட்கள் முதலியவற்றிற்குமே அந்த நாள் விசனகரமான நாளாய் முடிந்தது. அத்தகைய நிலையில் வீட்டின் காரியங்களைத் தான் செய்வதாக அவளுக்கு நினைவு; இங்கிருந்ததை அங்கு வைத்தல்; அங்கிருந்ததை இங்கு வைத்தல், அவ்வளவு காரியம் வீடு முற்றிலும் அலங்கோலம். மேனகா தன் கணவன் வீட்டைவிட்டுப் பிரயாணம் போனமையால் அன்று சாம்பசிவத்தின் வீட்டிலிருந்த பொருட்களுக்கெல்லாம் தத்தம் இருப்பிடத்தை விட்டுப் பிரயாணம். அவளுடைய அபி நயங்களுக் கிணங்கப் பாத்திரங்கள் யாவும் பக்க வாத்தி யங்களாய் முழங்கின. அம்மிக்குழவி “திமி திமி தை தா” வென்று நாட்டியமாடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/109&oldid=1249230" இலிருந்து மீள்விக்கப்பட்டது