பக்கம்:மேனகா 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மேனகா

ஓங்கி அதட்டிக் கேட்க, அவன் “சின்ன எஜமான்; சின்ன எஜமான்” என்று கையைப் பின்புறம் கட்டினான்.

கிட்டனை வேலைக்காரர் யாவரும் சின்ன எஜமான் என்று குறித்தல் வழக்கம். ஆதலால் கிட்டன் மீது ஏதோ கோட் சொல்ல அவன் வந்தான் என்று நினைத்த சாம்பசிவம், “ஏனடா கழுதை அவன் மேல் என்னடா சொல்ல வந்தாய்? செருப்பாலடி நாயே! இதுதான் சமயமென்று பார்த்தாயோ? போக்கிரிக் கழுதே! ஒடு வெளியில்” என்று கூறிய வண்ணம் எழுந்து அவனை அடிக்கப் பாய்ந்தார். அவன் நெருப்பின் மீது நின்று துடிப்பவனைப் போல தத்தளித்துத் தனது பற்களை யெல்லாம் ஒன்றையும் மறையாமல் வெளியிற்காட்டி, “இல்லை எஜமான்! ராயர் எஜமான் வந்திருக்கிறார்” என்றான்.

“அவன் யாரடா ராயன்? எந்தக் கழுதையையும் இப்போது பார்க்க முடியாது! போ வெளியில்” என்றார்.

தன் மீது அடிவிழுந்தாலும் பெறத் தயாராக நின்ற சேவகன் மேலும், “தாலுகா எஜமான் வந்திருக்கிறார்” என்றான்.

அதைக்கேட்ட சாம்பசிவத்தின் கோபம் உடனே தனிவடைந்தது. “யார்? தாசில்தாரா வந்திருக்கிறார்? உள்ளே அழைத்துவா!” என்றார்.

உட்புறத்தில் நடந்த அழகிய சம்பாஷணையை முற்றிலும் கேட்டிருந்த நமது தாந்தோனிராயர் பெரிதும் வெட்கினார்; அவருடைய தேகம் குன்றியது; என்றாலும் அக் குறிகளை மறைத்து, ஒன்றையும் கேளாதவரைப் போல எத்தகைய சலனமும் இல்லாத முகத்தோற்றத்தோடு உள்ளே நுழைந்தார். டிப்டி கலெக்டரிடத்தில் அந்தரங்க அன்பையும், மரியாதை யையும், பணிவையும் கொண்டவரென்று அவருடைய முகங் காட்டியது. “காலை வந்தனம் ஐயா!” (Good Morning Sir) என்னும் ஆங்கிலச் சொற்கள் அவருடைய வாயிலிருந்து வந்தன. அதே காலத்தில் இந்து மதக் கொள்கையின்படி கைகளைக் குவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/116&oldid=1249522" இலிருந்து மீள்விக்கப்பட்டது