பக்கம்:மேனகா 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மேனகா

தான் ஏதோ மோசத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நன்றாக உணர்ந்தாள். இன்னமும் தான் நாணத்தினால் மெளனங் கொண்டிருந்தால், தன் கற்பிற்கே விபத்து நேர்ந்து விடும் என நினைத்தாள். பிறர் உதவியின்றி தனிமையில் விபத்தில் இருக் கையில் பெண்டீர் நாணமொன்றையே கருதின், மானமும், கற்பும் நில்லாவென எண்ணினாள். புலியின் வீரத்தையும், துணிவையும், வலுவையும் கொண்டாள். தனது சிரத்தை உயர்த்தி, “ஐயா! இது எந்த இடம்? என்னை அழைத்துவந்த மனிதர் எங்கு போயினர்? நீர் யார்? என்னை இவ்விடத்தில் தனிமைப் படுத்தியதின் காரணம் என்ன? தயவு செய்து இவற்றைத் தெரிவித்தால், நீர் இப்போது செய்த உபசரணைகளைக் காட்டிலும் அது பதின்மடங்கு மேலான உதவியாகும்” என்றாள்.

நைனா முகம்மது முன்னிலும் அதிகரித்த மகிழ்ச்சி கொண்டு, “பலே! இவ்வளவு அழகாய்ப் பேசுகிறாய்! உனக்கு வீணை வாசிக்கத்தெரியும் என்று நான் கேள்விப்பட்டேன். நீ பேசுவதே வீணை வாசிப்பதைப் போலிருக்கிறதே! இன்னம் வீணை வாசித்துப் பாடினால் எப்படி இருக்குமோ! மூடப்பெண்களைக் கலியாணம் செய்து, பிணத்தைக் கட்டி அழுதலைப்போல ஆயிரம் வருஷம் உயிர் வாழ்வதைவிட மகா புத்திசாலியான உன்னிடம் ஒரு நாழிகை பேசியிருந்தாலும் போதுமே! இந்தச் சுகத்துக்கு வேறு எந்தச் சுகமும் ஈடாகுமோ! மேனகா! நீ கேட்கும் கேள்வி ஆச்சரியமாயிருக்கிறது; இப்போது இங்கு வந்த உன்னுடைய தாயும், அண்ணனும் உன்னை ரூபா பதினாயிரத்துக்கு என்னிடம் விற்றுவிட்டது உனக்குத் தெரியாதா? அவர்கள் உங்களுடைய வீட்டிற்குப் போய்விட்டார்களே! அவர்கள் உண்மையை உன்னிடம் சொல்லியிருந்தும் நீ ஒன்றையும் அறியாதவளைப் போலப் பேசுகிறாயே! பெண்களுக்குரிய நாணத்தினால் அப்படி பேசுகிறா யென்பது தெரிகிறது. நீ பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது! பாவம் இன்னமும் நிற்கிறாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/120&oldid=1249531" இலிருந்து மீள்விக்கப்பட்டது