பக்கம்:மேனகா 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மேனகா

நிலைமையை அடைந்தாள். என்றாலும், அபலையான தான், அன்னியன் வீட்டில் அவனுடைய வலுவை அறியாமல் தேகபலத்தினால் மாத்திரம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தல் தவறென மதித்தாள். மேலும், என்ன நடக்கிற தென்று அறிய நினைத்து தனது கோபத்தை ஒரு சிறிது அடக்கிக்கொண்டாள். தன் கணவனையும் தன் குடும்பத் தெய்வமான ஸ்ரீநிவாசப் பெருமாளையும் நினைத்து மனதிற்குள் ஸ்தோத்திரம் செய்தாள். இனித் தன் கணவனுக்கும் தனக்கும் உறவு ஒழிந்தது நிச்சயமென்று மதித்தாள். அந்தப் பிறப்பில் தான் கணவனுடன் வாழ்க்கை செய்தது அத்துடன் அற்றுப்போய் விட்டது நிச்சயமென்று எண்ணினாள். எப்பாடு பட்டாயினும் தன் உயிரினும் அரிய கற்பை மாத்திரம் காத்து அவ்விடத்தை விடுத்து வெளியிற் போய்க் கிணற்றில் வீழ்ந்து உயிர் துறந்துவிடத் தீர்மானித்தாள். அவனிடம் முதலில் நயமான சொற்களைக் கூறி அவன் மனதை மாற்ற நினைத்து, “ஐயா! நீர் படிப்பையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் பெருமைப் படுத்துவதிலிருந்தே, நீரும் படித்த புத்திமான் என்று தோன்றுகிறது. நான் அன்னிய புருஷனுடைய மனைவி. நானென்ன உப்பா புளியா? என்னை விற்கவும் வாங்கவும் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்னை விற்க என்னுடைய புருஷனுக்குக் கூட அதிகாரமில்லையே! அப்படி இருக்க, நீர் வஞ்சகமாக என்னைக் கொணர்வதும், என்னால் சந்தோஷ மடைய நினைப்பதும் ஒழுங்கல்ல. நீர் நல்ல ஐசுவரிய வந்தனாய்த் தோன்றுகிறீர். உங்களுடைய ஜாதியில் புருஷர் பல பெண்களை உலகம் அறிய மணக்கலாம். என்னைப் பார்க்கிலும் எவ்வளவோ அழகான பெண்கள் அகப்படுவார்கள். அவர்களை மணந்து உம்முடைய பொருளாக்கிக் கொண்டால் உமது இச்சைப் படி அவர்கள் நடப்பார்கள். கல்வி, வீணை முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தல் அரிய காரியமல்ல. பணத்தைச் செலவிட்டால், இரண்டு மூன்று வருஷங்களில் அவற்றைக் கற்றுக் கொடுத்துவிடலாம். பிறகு நிரந்தரமாய் நீர் சுகப்படலாம். இந்த அற்பக் காரியத்திற்காகப் பிறன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/122&oldid=1251022" இலிருந்து மீள்விக்கப்பட்டது