பக்கம்:மேனகா 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

119

அதிக நேரம் இவ்வுலகில் தாமதித்தால், என் கணவனது ஆன்மாவிற்கு அது சகிக்க வொண்ணாக் காட்சியாகும். ஆகையால், உன் வேலையைச் செய்” என்றாள். தான் பெண் என்பதை மறந்தாள். உயிரைத் துரும்பாக மதிக்கும் வீராதி வீரனைப்போல கத்தியைக் கையில் எடுத்தாள். தந்தத் தகட்டைப் போல மின்னி கண்களைப் பறித்து மனதை மயக்கி அழகே வடிவமாய்த் தோன்றிய அவளது மார்பில் அந்த வாள் வலுவாக நுழையும்படி அதற்கு விசையூட்ட நினைத்து தனது கையை நன்றாக நீட்டி இலக்குப் பார்த்தாள். அதற்குள் அவளுக்கு மிகவும் அருகிலிருந்த ஒரு கதவு படீரென்று திறந்தது; மின்னல் தோன்றுதலைப் போலத் திடீரென்று ஒருவருடைய கரம் தோன்றி அந்தக் கத்தியை வெடுக்கென்று அவள் கரத்தினின்று பிடுங்கிவிட்டது. “ஐயோ! மகம்மதியன் கத்தியைப் பிடுங்கிவிட்டானே! இனி என்ன செய்வேன்?” என்று நினைத்துப் பேரச்சம் கொண்டு பதறிக் கீழே வீழ்ந்து மூர்ச்சித்தாள்.

❊ ❊ ❊ ❊ ❊

சற்றுநேரத்திற்கு முன்னர் அவளைத் தனியே விடுத்துப் போன நைனா முகம்மது மரக்காயன் நினைத்தவற்றையும் செய்தவற்றையும் நாம் நன்றாறிய வேண்டுமன்றோ? சாமாவையரின் மூலமாய் அவளை அவளுடைய வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுவதாக அவன் சொன்னது முற்றிலும் வஞ்சகம்; அந்த அழகிய யெளவன மடமாதைத் தனது பெருத்த செல்வமே போயினும், தன் உயிரே அழியினும் தான் அனுப்பக்கூடாதென உறுதி செய்து கொண்டான்; அவளை விடுத்து வெளியிற் சென்றவன் வேறொரு அறைக்குள் நுழைந்து ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்தான்; கோபத்தினாலும் அவமானத்தினாலும் அவனுடைய தேகம் துடிதுடித்து வியர்த்தது; அவனுடைய மோகாவேசம் உச்சநிலையிலிருந்தது;

“துஞ்சா தயர்வோ டுயிர் சோர் தரவென்
நஞ்சார் விழிவே லெறிநன் னுதலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/137&oldid=1249792" இலிருந்து மீள்விக்கப்பட்டது