பக்கம்:மேனகா 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மேனகா

வந்தன என்று பல விதமான சந்தேகங் கொண்டு திகைத்தான். இடியோசையைக் கேட்ட நாகம் போலப் பேரச்சம் கொண்டு பேச்சு மூச்சற்று அப்படியே மயங்கித் தலையணையில் சாய்ந்தான். தண்ணீரில் ஆழ்த்தப்பட்ட கொள்ளிக் கட்டையைப் போல, அவனுடம்பைக் கொளுத்திய காமத்தீ தணிந்து இருந்த இடம் தெரியாமல் பறந்தது. அது காறும் தன் மனைவியிடம் தனது விபசாரங்களை மறைத்துத்தான் பரம யோக்கிய னென்று நடித்து அவளை வஞ்சித்தது அப்போது வெட்ட வெளிச்ச மாயிற்று. அவளை நினைத்த விதம் தூற்றியவை யாவும் அவனுடைய நினைவிற்கு வர அவன் நடுநடுங்கி மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்தான்.


❊ ❊ ❊ ❊ ❊


11-வது அதிகாரம்

மேனகாவின் கள்ளப் புருஷன்

“அக்காள்! அடி அக்காள்!” என்று பொங்கி யெழுந்த ஆத்திரத்தோடு பெருந்தேவியைக் கூவி அழைத்தவனாய்க் கையிலேந்திய தந்தியுடன் உட்புறம் நுழைந்த வராகசாமி நேராக சமையலறைக்குள் சென்று, “அவள் தஞ்சாவூரில் இல்லையாமே!” என்று பெரிதும் வியப்பும் திகைப்பும் தோன்றக் கூறினான்; அவனுடைய உடம்பு படபடப்பையும், சொற்கள் பதைபதைப்பையும், முகம் அகத்தின் துன்பத்தையும், கண்கள் புண்படும் மனத்தையும் யாவும் பெருத்த ஆவலையும் ஆத்திரத்தையும் காட்டின. பாம்பைக் கண்டு நாம் அஞ்சி நடுங்குகிறோம். பாம்போ நம்மைக் கண்டு பயந்தோடுகிறது. வராகசாமி தனது சகோதரிமாரிடம் அச்சத்தைக் காட்டியதைப் போல், குற்றமுள்ள மனத்தினரான அவ்விரு பெண்டிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/144&oldid=1252367" இலிருந்து மீள்விக்கப்பட்டது