பக்கம்:மேனகா 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மேனகா

காணப்பட்டது. “என் மாமனார் பட்டணத்துக்கே வரவில்லையாமே?” என்றான். மழைத் தூறலைக் காற்றானது கலைப்பதைப்போல கோபமும் துக்கமும் பொங்கி மோதி அவனுடைய அஞ்சிய சொல்லைத் தடுத்தன. மலைபோல இருந்த மனையாட்டி எப்படி மறைந்துபோனாள் என்பதை அவளுடன் கூடஇருந்தவர் உள்ளபடி சொல்ல மாட்டாமல் தாறுமாறாய்ப் பேசியதைக் காண, அவனது தேகமும் கட்டிலடங்காமல் துடித்தன.

புதுமையாய்க் காணப்பட்ட அவனுடைய நிலைமையைக் கண்ட பெருந்தேவி உள்ளுற மருண்டு விட்டாள். எனினும், அதிர்ந்த சொல்லால் வாயடியடித்தே தப்பவேண்டு மென்று நினைத்து அவனைச் சிறிதும் சட்டை செய்யாத வனைப் போல இருந்தாள். முதல்தர வாய்பட்டியான பெருந்தேவியே விழிக்கும்போது கோமளத்தைப் பற்றிச் சொல்வது மிகையாகும். தண்ணீரில் மூழ்கும் நிலைமையில் இருப்பவன் வைக்கோலைப் பிடித்துக் கொள்வதைப்போல அவள், கரியேறிய தவலையொன்றைக் குப்புறத்தள்ளி, அது வாய்விட்டு ஒலமிடும்படி தேய்த்துத் திருவாழ்த்தான் கறுப்புநாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப்போல எத்தனை நாளைக்குத் தேய்த்தாலும் அது வெளுக்கும் என்னும் அச்சம் சிறிதும் இல்லாமல், ஆடம்பரம் செய்தவளாய்த் தனது முகத்தைச் சுளித்து, மூக்கை வளைத்து, உதட்டைப் பிதுக்கி, வாயால், “சூ” விட்டு “நன்றாயிருக்கிறது! ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். மாமனாராம் மாமனார்! இந்தமாதிரி ஆயிரம் மாமனாரையும் பெண்டாட்டியையும் சந்தையில் வாங்கலாம். வெளிக்கு மாத்திரம் பெரிய மனிதர்; உள்ளே பார்க்கப் போனால் அற்பபுத்தி, அவ்வளவும் ஊழல்; ஊரில் கழிக்கப்பட்ட பிணங்கள் நமக்கா வந்து வாய்க்க வேண்டும்; பெரிய வீடென்று பிச்சைக்குப் போனாலும், கரியை வழித்து முகத்தில் தடவினானாம் என்ற கதையாய் முடிந்தது” என்று கோமளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/146&oldid=1250195" இலிருந்து மீள்விக்கப்பட்டது