பக்கம்:மேனகா 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மேனகா


அதைக்கேட்ட பெண்டீர் இருவரும், சண்டைபோடும் பொருட்டு முள்ளம்பன்றிகள் தமது உடம்பிலுள்ள முட்கள் இலிர்க்கப் பதறி நிற்பதைப்போல இருந்தனர். பெருந்தேவி, “ஓகோ! அவன் பொய் சொல்லாத அரிச்சந்திர மகா ராஜாவோ? அப்படியானால் நாங்கள் சொல்வது பொய்யோ? சரிதான் இப்படிப்பட்டவன் என்பதை அப்பாவி அறிந்து கொண்டுதானே அவனும் அவளும் இப்படிச் செய்து விட்டார்கள். திம்மாஜி பண்டிதரென்பது முகத்திலேயே தெரியவில்லையா? அவன் ரஜா வாங்கினானா இல்லையா வென்பதை நீ அறிந்துவிடமுடியுமோ? அவன் இரகசியமாக ரஜா வாங்க நினைத்தால் தஞ்சாவூர் முழுதிலும் தப்படித்து விட்டுத்தான் வாங்குவானோ? பெரிய கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் அனுப்பினால், அவனும் அதன் பேரிலேயே பதில் எழுதி அனுப்பிவிடுகிறான். இந்த மாதிரி அவன் உன்னுடைய கலியாணத்தில் ரஜா வாங்கினதை நீ மறந்தாலும் நான் மறப்பேனோ? அதெல்லாம் உன்னுடைய குற்றமல்ல. உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் மருந்தின் வேலையாக்கும் இது. அவர்கள் அந்தத் தேவடியா நாரியை இங்கே எதற்காக அனுப்பினார்கள்? மருந்தை உள்ளே செலுத்தத்தானே அனுப்பினார்கள். இனிமேல் உனக்கு அவர்கள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்கும். இஞ்சி தின்ற குரங்கின் முகத்தைப்போல உன் முகமே நிஜத்தைச் சொல்லுகிறதே! மருந்து பேஷான மருந்து! பாட்டியம்மாள் இலேசானவளா! மருமகள் பேத்தி எல்லோர்க்கும் தாய்க்கிழவி யல்லவா அவள்! பொறித் தட்டுவதைப்போல உன்னை ஒரு நிமிஷத்தில் அவளுடைய மாத்திரைக் கோலால் புது மனிதனாக்கி விட்டாளே! கிழவி சாகவும் மாட்டாள்; செத்தாலும் எமனையும் எத்தி விடுவாள்; பற்றி எரியும் நெருப்பையும் மயக்கி விடுவாளே!

கோமளம்:- ஏனடி அக்காள்! அவள் வந்த மறுநாளே நான் சொன்னேன்; அப்போது எருமை மாட்டைப்போலப் பேசாமலிருந்து விட்டு இப்போது,“பப்பட்டி பப்பட்டி” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/150&oldid=1250200" இலிருந்து மீள்விக்கப்பட்டது