பக்கம்:மேனகா 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

151

தத்ரூபமாய்த் தோன்றி அவனை வதைத்தன. இன்னொரு பெட்டி நிறையப் பவுன்களும், ரூபாய்களும் இருந்தன. அத்துடன் ஒரு பகுதியின் சோதனையை நிறுத்திவிட்டு அடுத்த பகுதியை ஆராய்ச்சி செய்தான். அதில் ஒவ்வொன்றும் 200, 250 ரூபாய் பெறுமான முள்ள 7,8 பெங்களுர் பட்டுப் புடவைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பெட்டியிலிருந்த ஒவ்வொரு பொருளும் அவளுடைய ஒவ்வொரு அங்கத்தை நினைப்பூட்டி அவனைப் பெரிதும் வருத்தி துயரக் கடலில் ஆழ்த்தியது. புடவைகளின் கீழ் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் செய்யப்பட்ட அழகான பலவிளையாட்டுச் சாமான்கள் காணப்பட்டன. யாவற்றையுங் கண்ட வராகசாமி மேனகாவை நினைத்து நெடுமூச் செறிந்து கண்ணிர் விடுத்தான். “என் கிள்ளையே! நீ இவ்வளவு பெருத்த செல்வத்தை அடைந்திருந்தும் நற்குணம், நல்லொழுக்கம், அழகு முதலிய யாவற்றையும் பெற்றிருந்தும் சரியான புருஷனை மணந்து அவனுடன் இன்பம் அநுபவிக்கக் கொடுத்து வைக்காமற் போனாயே! உன் யோக்கியதைக்கும் மேன்மைக்கும் ஒரு சிறிதும் தகாத அதமனிலும் அதமனான என்னை நீ மணந்து தேம்பித்தவிக்கும்படி ஆனதே உன் கதி! இதுவரையில் போனது போகட்டும், இனி உன்னை நான் அன்போடு நடத்தி இன்புறுத்துவேன் என்று உனக்கு உறுதி கூறினேன். அவ்வாறு நடக்க வில்லையா? நீ ஏன் இப்படித் திடீரென்று சொல்லாமல் போய்விட்டனை? நான் உன்னையும் சேலத்திற்கு அழைத்துப் போக வில்லையென்ற கோபமா? ஜட்ஜிதுரையைக் கொலைக் குற்றத்திற்காக ஏன் தண்டிக்கக் கூடா தென்றாயே! அத்தகைய மகா சாமர்த்திய சாலியான உன்னை நான் மனையாட்டியாக அடைந்தது பற்றி அப்போது என் தேகம் எப்படிப் பூரித்தது தெரியுமா! அப்போது நான் கொண்ட பெருமை, நான் பி.எல். பரீட்சையில் தேறி விட்டேன் என்று கேட்டபோது கூட எனக்கில்லையே! இனி நான் சுட்டாலும், அடித்தாலும், வைதாலும் தகப்பன் வீட்டையே நினைப் பதில்லை யென்று உறுதி கூறினாயே! அப்போது சொன்னது பொய்யா? அன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/169&oldid=1250219" இலிருந்து மீள்விக்கப்பட்டது