பக்கம்:மேனகா 1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மேனகா

கண்மணியும், என் மனதைக் கொள்ளைகொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப்பிள்ளை -” என்பது வரையில் படித்தான். அதற்கு மேல் அவனால் படிக்கக்கூடவில்லை. மூளை சுழன்றது. அறிவு மயங்கியது. கையிலிருந்த காகிதங்களும் படமும் கீழே விழுந்தன. அருகில் சுவரோரமாய்ச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் கண்மூடிச் சாய்ந்து விட்டான்.

“என்னடா அது? என்னடா அது?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டுக்கொண்டு பெருந்தேவியம்மாள் பெட்டி யண்டையில் நெருங்கினாள். அதற்குள் கோமளம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து படத்தையும் கடிதங்களையும் கையி லெடுத்டு படத்தைப் பார்த்தாள். சாமாவையர் வராகசாமியின் பக்கத்தில் உட்கார்ந்து ஒன்றையும் அறியாதவரைப் போலத் திகைத்தார். படத்தைப் பார்த்த கோமளம், “மைசூர் மகாராஜாவின் படமல்லவா இது! இந்தப் படம் ஊரில் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! இதற்கு இவ்வளவு ஜாக்கிரதை யென்ன? இரகசியமாய் வைப்பதென்ன? அக்கா இந்தப் படத்தைப் பாரடி என்று கூறிப் பெருந்தேவியிடத்தில்காட்ட, அவள், “அடி உலக்கைக் கொழுந்தே! போ; இதுதான் மைசூர் மகாராஜாவின் படமோ? அதை நான் நன்றாகப் பார்த்திருக் கிறேனே. அது இவ்வளவு அழகாயுமில்லை. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பொட்டையானுக்கு கூடத்தெரியும்” என்றாள். அதற்குள் சாமாவையர், “எங்கே என்னிடத்தில் கொடுங்கள்; பார்க்கலாம்” என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்து, “படம் எவ்வளவு அழகாய் இருக்கிறது பார்த்தாயா பெருந்தேவி? முகவசீகரமும், களையும் எல்லோரையும் மயக்குகின்றனவே! என்ன அலங்காரம்! என்ன ஆடைகள்! இவன் மேலிருக்கும் உடுப்பு மாத்திரம் பதினாயிரம் ரூபாய் பெறும் போலிருக்கிறதே! நகையெல்லாம் வைரம் போலிருக் கிறதே” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/172&oldid=1250227" இலிருந்து மீள்விக்கப்பட்டது