பக்கம்:மேனகா 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மேனகா

நினைத்தேன்; பாவியாகிய எனக்கு நீ ஏன் முதலில் காட்சிதந்து என் மனதையும் உயிரையும் கொள்ளை கொண்டாய்? இந்த ஊரிலேயே இன்னம் நாலைந்து மாதம் இருந்து நாடகம் ஆடிப் பிறகு சென்னைக்குப் போவோ மென்று நான் எங்களுடைய கம்பெனித் தலைவரிடம் சொல்லி என்னால் கூடியவரையில் வற்புறுத்திப் பார்த்தேன். இந்த ஊரில் உண்டான நஷ்டத்தையெல்லாம் சென்னையில் உடனே சம்பாதித்து, கடன்களை அடைக்காவிட்டால் படுத்தாக்கள் முதலியவை விற்கப்பட்டுப் போமென்றும், ஆகையால் உடனே சென்னைக்குப் போக வேண்டுமென்றும், அவர் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவருக்கு இந்த ஊரில் ஏராளமாக நஷ்டம் உண்டானது உண்மை. ஆதலால், அவரை இன்னமும் வற்புறுத்துவது தருமமல்ல. என்றாலும், எனக்கு உடம்பு செளக்கிய மில்லையென்றும், நான்மாத்திரம் இரண்டு மூன்று மாதகாலத்திற்கு பின் வருகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். என்னைப்போல ராஜா வேஷம் போடுவதில் அவ்வளவு சாமர்த்தியம் உள்ளவர் வேறு எவரும் இல்லை. ஆதலால், நான் வராவிட்டால், அவர் தமது கம்பெனியைக் கலைத்துவிட்டு எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு இராத்திரியே காரைக்காலுக்கு ஒடிப் போவதே முடிவென்கிறார். அவருடைய நிலை மையும் பரிதாபமாக இருக்கிறது. நான் உன்னை விட்டுப் பிரிந்து போவதோ பரிதாபத்தினும் பரிதாபமாக இருக்கிறது! இந்த எட்டுமாத காலத்தில் எண்ணாயிரம் கோடி முத்தங் கொடுத்து அஞ்சுகம் போற் கொஞ்சிக் குலாவி என்னை எத்தனையோ முறை இன்பசாகரத்தில் ஆட்டிய என் காமக்களஞ்சியமான உன்னை விட்டுப் பிரிய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/174&oldid=1250258" இலிருந்து மீள்விக்கப்பட்டது