பக்கம்:மேனகா 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

163

காரியம் செய்; நீயே நேரில் போய் அந்தப் பயல் எந்த நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து மெல்ல அவனுடைய இருப்பிடத்தை அறிந்துகொள். அவனிடம் போய் போலீஸ்காரனை அழைத்து வந்து சிறையிலடைப்பதாய் மிரட்டி அவளை மாத்திரம் இரகசியமாய் அழைத்து வந்துவிடு. ஒருவருக்கும் தெரியாமற்போகும். இம்மாதிரி ஒடிப்போன பெண்களை எத்தனையோ பேர் அழைத்துவந்து பந்தியில் ஏற்றுக் கொள்ள வில்லையா? வராகசாமியிடம் ஒன்றும் கேட்காதே. அவன் அப்படித்தான் தடுப்பான்; நீ போய் அவளை அழைத்துக்கொண்டு வந்துவிடு.

சாமாவையர்:- போனது வந்தது தெரியாமல் அவளைக்கொண்டு வருவது என் பொறுப்பு; அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் போகிறேன். நீங்கள் யாரிடத்திலும் விஷயத்தைச் சொல்லாதேயுங்கள். கோமளம்! உன்னுடைய ஒட்டை வாய் ஜாக்கிரதை - என்று சொல்லிக் கொண்டு எழுந்தார். வராகசாமி அப்போதும் சாமாவையரை விடாமல் ஒரே உறுதியாய்த் தடுத்தான்.

பெருந்தேவி:- அடே சாமா! வராகசாமிக்குக் கொஞ்சம் கோபம் தணியட்டும். அதற்கு மேல் இவனுடைய யோசனையின் மேல் செய்ய வேண்டுவதைச் செய்வோம். நீ உடனே இவனுடைய பெரிய வக்கீலிடம்போய், இவனுக்கு உடம்பு சரியாக இல்லை. ஆகையால், இன்றைக்கு இவன் கச்சேரிக்கு வர முடியவில்லை யென்று சொல்லிவிட்டு வா - என்றாள்.

உடனே சாமாவையர் எழுந்து வெளியிற் போய் நல்ல மூச்சாய் விட்டுக்கொண்டு தம்முடைய வீடு சேர்ந்தார். வராகசாமி எழுந்து கடிதங்களையும் படத்தையும் எடுத்துக்கொண்டு தன் சயன அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டுத் தன் கட்டிலில் படுத்தான்.

❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/181&oldid=1250629" இலிருந்து மீள்விக்கப்பட்டது