பக்கம்:மேனகா 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




13-வது அதிகாரம்

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

திருவல்லிக்கேணி பெரிய தெருவிலிருந்த ஒரு வீட்டு வாயிலின் சிறிய திண்ணையில் சோம்பர் மகா சபையின் தினப்படிக் கூட்டம் ஒன்று அன்னக்காவடியா பிள்ளை என்னும் ஒரு பெரிய பிரபுவின் அக்கிராசனத்தின் கீழ் நடைபெற்றது. காரியதரிசியாகிய திகம்பரமையர் தமது வலக்கரத்தில் இந்துப் பத்திரிகை யொன்றை வைத்துக்கொண்டிருந்தார். பொக்கிஷ தாரரான சவுண்டியப்ப முதலியார் தம்முடைய கையிலிருந்த சொறி சிரங்குகளைக் கணக்குப் பார்த்துத் தணிக்கை செய்துகொண்டிருந்தார். அங்கத்தினரான சாப்பாட்டு ராமையங்கார் மண் தோண்டியைக் கவிழ்த்தவாறு உருண்டு திரண்டு உடம்பை விட்டு நெடுந்தூரத்தில் தனிமையில் உட்கார்ந்திருந்த செல்லக் குழந்தையாகிய தமது தொந்தியைத் தடவிக் கொடுத்தவண்ணம் நாட்டின் வளப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். சாப்பாட்டு வேளைகள் நிற்க, மற்ற வேளைகளெல்லாம் அவர்கள் நால்வரும் அந்தத் திண்ணையிலேயே காணப்படுவார்கள். ஜெர்மானியரின் சண்டை, இராஜாங்க விஷயங்கள் முதலியவற்றையும், ஊர் வம்புகளையும் பேசி, ஆழ்ந்த யோசனைகளைச் செய்து, “அப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்”, “இப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்” என்று மேலதிகாரிகளின் காரியங்களில் குற்றங் குறைகளைக் கண்டு பிடித்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும், தருக்கம் செய்து கொண்டும், கூக்குரல் செய்து கொண்டிருப்பர். அந்தச் சங்கத்தினரின் காரியம் அம்மட்டோடு நிற்கவில்லை. அவர்கள் அந்தத் தெருவை ஒரு நாடகமேடையாகவும், அதன் வழியாகச் செல்லும் ஆண் பெண் பாலார் யாவரையும் நாடகத்தில் பிரசன்னமாகும் நடிகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/202&oldid=1252369" இலிருந்து மீள்விக்கப்பட்டது