பக்கம்:மேனகா 1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

187

என்ன கண்ணாடி! என்ன வாய்வெட்டு! அந்தப் புருவ வில்லு எம்.ஆர். சி. ரயில் கைகாட்டி மரம்போல கைகாட்டி அழெக்கிதுடா” என்றார்.

அப்போது சவுண்டியப்ப முதலியார் சிரங்குகளைக் கணக்கிட்ட பிறகு இரண்டு கைகளையும் கொண்டு கணைக்கால் இரத்த வெள்ளமாகும்படி விடாமல் சொறிந்து தச்சன் இழைப்புளி போட்டுமரத்தை இழைப்பதுபோலச் சொறிந்த சுகத்தினால் தானே திறந்து கொண்ட வாயிலிருந்து மேலே வடிந்த இன்பரசத்தைத் துடைக்கவும் மனமற்றுத் தமது வேலையைப் பார்த்தார்.

திகம்பரமையர், “இவள் சரியா ஆறடி உயிரம் இருக்கிறாளே; இவள் புருஷன் இரண்டே முக்கால் அடி உயரந்தானே இருக்கிறான். இவளுடைய காதில் ஏதாவது ரகசியம் சொல்லவேண்டுமானா ஏணி வச்சு ஏறி இவளுடைய தோள்மேலே அவன் உட்கார்ந்துகொள்வானோ?” என்று கூறிக் கலகலவென்று தாமே சிரித்துக்கொண்டார்.

அன்னக்காவடியா பிள்ளை:- “இல்லேடா; இவள் கீழே படுத்துக்குவா; அவன் நின்னுகிட்டே பேசுவான். வீட்டு மச்சுமேலே ஏதாச்சும் சாமான் எடுக்கிறதுக்கு வேறே ஏணி தேவையில்லடா! இவளெக் கட்டிக்கிட்டவனுக்கு அது ஒரு லாபண்டா! ஏணி வாங்க வேண்டியதில்லை"- என்றார்.

அந்த ஸ்திரீக்கு உண்மையிலேயே நீண்ட கால்களிருந்தது அப்போது அநுகூலமாய் முடிந்தது. அவைகளின் உதவியால் அவள் சீக்கிரம் அப்பால் போய்விட்டமையால், அவர்களது மதிப்புரை மேலும் நீளவில்லை.

அதன் பிறகு தெருவில் வந்தவன் ஒரு ஆண்பிள்ளை. சபையோரின் மதிப்புரையைப் பெறும் பாக்கியம் அவனுக்கு வந்தது.

அன்னக்காவடியா பிள்ளை:- அடே! தொந்திப்பையா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/205&oldid=1250828" இலிருந்து மீள்விக்கப்பட்டது