பக்கம்:மேனகா 1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

189

பாருடா எனறார்.

இந்த அன்னக்காவடி சபையினர் தங்களது வழக்கப்படிப்பேசிக்கொண்டே இருக்கட்டும். தனிமையிற் செல்லும் நமது வராகசாமியைப் பின்பற்றி நாமும் செல்வோம். தங்களுடைய அக்காளின் உபத்திரவங்களைச் சகிக்க மாட்டாதவனாய் வீட்டைவிட்டு வெளிப்பட்ட வராகசாமி பரதேசியோ அல்லது பைத்தியக்காரனோ வென்று காண்போர் நினைக்கும் வண்ணம் மெய்ம்மறந்து சோர்வடைந்து எத்தகைய காரிய காரணங்களும் இன்றி தெருத்தெருவாய் அலைந்து திரிந்தான். ஹோட்டலில் காப்பி அருந்தப் போவதாய்க் கூறி வந்தவன் ஹோட்டலையும் மறந்தான்; காப்பியையும் மறந்தான். மனமோகன மாயாண்டிப்பிள்ளையின் கடிதங்களில் இருந்த சொற்களே இன்னமும் அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து உணர்ந்த விஷயங்களை, தன்னுடைய மனத்திலிருந்து விலக்குவதற்கு அவன் எவ்வளவு முயன்றும் அம் முயற்சி பலிதமாகவில்லை. சோம்பர் மகாசபையின் கெளரவ அங்கத்தினர்களான நால்வர் மனதுகளும் எவ்வாறு சுறுசுறுப்பாக வேலைசெய்தனவோ அவைகளிலும் அதிக ஊக்கத்தோடு வராகசாமியின் மனது வேலை செய்தது. புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்புதலைப்போல அவன் மனதில் எழுபத்திரண்டு வெள்ளம் நினைவுகள் இராமபிரானுடைய வானர சைனியங்களைப் போலத்தோன்றி ஆர்ப்பரித்தன. “சே! என்ன கடிதம்! அசங்கயித்திலும் அசங்கியம்; ஆபாசத்திலும் ஆபாசம்! அதை ஏன் என் காதாற் கேட்டேன்? நினைக்கும் போதே என் தேகம் குன்றிப் போகிறதே! மனம் கூசுகிறதே! கேவலம் இழிவிலும் இழிவு! கூத்தாடிப் பயலுடைய கடிதம் என்பது சரியாய்ப் போய்விட்டது. அவன் குணம் எங்கே போகும்? லட்சம் ஜனங்களுக்கெதிரில், மானங்கெட்ட காரியங்களைச் செய்கிற உணர்ச்சியில்லா மிருகப்பயல் கடிதத்தில் எதைத்தான் எழுதமாட்டான்? மானம் வெட்கம் கண்ணியம் முதலியவற்றை உடைய மனிதன் இந்தக் கடிதத்தைக் கையாலும் தொடமாட்டான். பார்த்த கண்ணையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/207&oldid=1250830" இலிருந்து மீள்விக்கப்பட்டது