பக்கம்:மேனகா 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பசிவ ஐயங்கார்

3

பொட்டிட்டு மையிட்டுக் காற்றாகிய பால் புகட்டி அதனால் ஆத்ம திருப்தியடைதல் பெரும்பான்மையும் காணப்படுகிறது. நமது சாம்பசிவ ஐயங்காரும் அவர்களில் ஒருவராதலால், போஜனத்தின் பிறகு தமது இயற்கையின்படி இரட்டைச்சக்கர வண்டியின் இடத்திற் சென்றவர், அவ்வண்டியாகிய குழந்தைக்கு அன்று ஒரு நோய் கண்டிருந்ததை அறிந்தார். அவர் வெளியிற் சென்றிருந்த தருணத்தில் அவருடைய சமையற்காரன் மாதவன் அதில் முரட்டாட்டமாக ஏறி நெடுந்தூரம் சென்று அதை ஒடித்து வைத்திருந்தான். அதைக்கண்ட சாம்பசிவம் தமது நெற்றிக்கண்ணைத் திறந்தார். வசை மாரியைச் சொரிந்தார்; பிரம்பைக் கையிலெடுத்தார்; எதிரில் நடுநடுங்கி நின்ற டபேதார் ரெங்கராஜூவின் மீது சீறிப் பாய்ந்தார். “நாயே! நீ இங்கே எதற்காக இருக்கிறாய்? உன்னுடைய டாலி டவாலிகளைக் கழற்றிக் கீழே வைத்துவிடு; என் முன்னால் நில்லாதே; ஒடிப்போ கழுதை, உனக்கு எதற்காகச் சம்பளம் கொடுத்துப் பிண்டமும் கொட்டி வீட்டில் உட்கார வைத்திருக்கிறது?” என்று தாறுமாறாய்த் திட்டினார். அவருக்கு முன்னர் வந்திருந்த டிப்டி கலெக்டர்களிடத்தில் அத்தகைய அவமதிப்பை பெற்றறியாத ரெங்கராஜுவின் முகம் சினத்தினால் சிவக்க, இரத்தம் தெறித்தது. அவன்தன்னை அடக்கிக்கொண்டு, “இல்லெ சாமி! சமையக்கார ஐயரு ஏறிக்கிட்டுப் போனாரு; எனக்குச் சங்கதி தெரியாதுங்க” என்று பணிவாக மொழிந்தான். பெருஞ் சீற்றத்தினால் தமது மதியை இழந்த நமது ருத்ர மூர்த்தி, “அந்தப்பயல் இதைத் தொடும்போது யாருக்கு சிறைத்துக்கொண்டு இருந்தாய்? போக்கிரி நாயே குற்றத்தைச் செய்துவிட்டு எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று பிரம்பை ஓங்கி அவனை இரண்டு அடிகள் அடித்து விட்டார். மானியும் முரட்டு மனிதனுமாகிய ரெங்கராஜூ உடனே தன்னை மறந்தான். அவரது கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கிக் கொண்டு வட்டியும் முதலுமாக அடியைத் திருப்பிக்கொடுத்து அவருடைய கோபம் தணியும்படி செய்து விட்டான். அதன் பிறகு ரெங்கராஜு பல நாட்கள் வரையில் தன் வேலை போய்விட்ட தென்றே நினைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/21&oldid=1248088" இலிருந்து மீள்விக்கப்பட்டது