பக்கம்:மேனகா 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மேனகா

தற்செயலாய் அதிலேயே உட்கார்ந்து கொண்டார். இப்போது கீழே குனிந்தபோது அதையே கண்டார் . “ஆகா! என்னை அவனமானப் படுத்திக் கீழே குனியச் செய்தாயல்லவா. இதோ உன்னை அவமானம் படுத்தும்படி உன்னுடைய தந்தியே என்னிடம் வந்து சேர்ந்தது பார்” என்று தம் மனதில் நினைத்துக்கொண்ட ராயர், மெல்ல அதையெடுத்துக்கொள்ள நினைத்தார். சாம்பசிவத்திற்கு எதிரில் மேஜை மறைத்திருந் தமையால், அவர் காகிதத்தைப் பார்க்கவில்லை. என்றாலும், தாந்தோனிராயர் ஒரு தந்திரம் செய்தார்; தம்முடைய கையிலிருந்த கைக்குட்டையை எடுத்துத் தமது முகத்தைத் துடைப்பவர்போலச் செய்து அந்த தந்திக் காகிதத்தின் மேல் விழும்படி அதைவிட்டார். உடனே கீழே குனிந்து கைக்குட்டையையும், அதன் கீழிருந்த தந்தியையும் ஒன்றாய்ச் சேர்த்தெடுத்துத் தமது சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டார். சாம்பசிவம் கண்டுபிடித்துக் கேட்டாலும் காகிதம் தவறுதலாய் சவுக்கத்தோடு வந்துவிட்டதாகச் சொல்லத் தீர்மானித்துக் கொண்டார். அந்தப் பீதாம்பரையர் ஜாலம் கால் நிமிஷத்திற்குள் நிறைவேறியது. உடனே, வியப்பைக் காட்டிய முகத்தோடு சாம்பசிவத்தை நோக்கி, “ஆகா! தங்களுடைய குணமல்லவோ குணம் எப்போதும் மேன்மக்கள் மேன்மக்களேதான்! இந்த அவசரத்தில் எங்களுக்கு ரஜாக் கொடுக்காமல் துரை இப்படிச் செய்திருந்தால், எங்களுக்கு மிகவும் மூர்க்கமான கோபம் பிறந்திருக்கும். வாயில் வந்தவிதம் பொருத்த மில்லாமல் தூற்றி யிருப்போம். துன்பச் சமயத்திலும் நீங்கள் நடு நிலைமை தவறவில்லை. அவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதவி தான் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு ஈசுவரன் ஒருநாளும் குறைவு வைக்கமாட்டான்” என்று சாம்பசிவத்தைப் புகழ ஆரம்பித்தார்.

சாம்ப:- (புன்சிரிப்போடு) இப்போது சொன்ன நீதி நம்முடையதுரைக்கும் பொருந்துமல்லவா? கலெக்டர் பதவிக்கு அவர் தகுந்தவரென்றுதான் நாம் மதிக்கவேண்டும்- என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/236&oldid=1250913" இலிருந்து மீள்விக்கப்பட்டது