பக்கம்:மேனகா 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மேனகா

பிற்பகல் 4 1/2 மணி நேரம் வரையில் பொறுத்திருந்தனர். அதற்குமேல் சும்மாவிருக்க அவர்களால் இயலவில்லை. கிட்டனை தாந்தோணிராயர் வீட்டிற்கு அனுப்ப நினைத்தனர். அப்போது ஒரு சேவகன் திடீரென்று உட்புறம் நுழைந்து வில்லாக உடம்பை வளைத்து சாம்பசிவத்தை வணங்கினான். சாம்பசிவம், “என்னடா சங்கதி? எங்கிருந்து வருகிறாய்?” என்று பெரிதும் ஆவலோடு கேட்டார். சாம்பசிவத்தினிடம் நெருங்குவதற்கும் அவரிடம் பேசுவதற்கும் சேவகர்களுக் கெல்லாம் நிரம்பவும் அச்சம் ஆதலால், அவனுடைய உடம்பு நடுங்கியது; வாய் குழறிப்போயிற்று. “கலெக்டர் எசமான் - இல்லை எசமான் தாலுகா எசமான்” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவன், தான் ஏதோ தவறுதலாகச் சொல்லிவிட்டதாக நினைத்து தன்னைத் திருத்திக்கொண்டான். அதற்குமேல் பேச மறந்துபோய் விட்டான். அதைக்கண்டு கோபங்கொண்ட சாம்பசிவம், “என்னடா குட்டிச்சுவரே விழிக்கிறாய்? சீக்கிரம் சொல்லித் தொலை. இந்த அற்ப சங்கதியைச் சொல்ல மாட்டாமல் தவிக்கிறாயே! தாசில்தாரிடமிருந்து தானே வருகிறாய்?” என்றார்.

சேவகன்:- ஆமா எசமான்! சாங்கிசன் ஆயிப்போச்சுன்னு ராயர் எசமான் சொல்லச் சொன்னாங்க - என்றான்.

சாம்ப:- அவர் எங்கடா இருக்கிறார்?

சேவ: - தொரே பங்களாவுல அவருக்கு வேலை இருக்குதாம். உள்ளற இருந்தவங்க வெளிலே அவசரமா வந்து என்னைக் கூப்பிட்டு, இந்தச் சங்கதியை ஒடனே ஒடியாந்து எசமாங்கிட்ட சொல்லிப்புட்டு வரச் சொன்னாங்க; ஒடனே உள்ள போயிட்டாங்க - என்றான்.

அதைக் கேட்ட சாம்பசிவத்தின் முகத்தில் சந்தோஷம் ஜ்வலித்தது. அன்று காலையில் எழுந்தது முதல் அப்போதே அவர் மனம் முதன் முதலாக ஒரு சிறிது மகிழ்ச்சி அடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/240&oldid=1250918" இலிருந்து மீள்விக்கப்பட்டது