பக்கம்:மேனகா 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

225

காரியமுண்டா” என்றார். தாசில்தார் மிகவும் பணிவாக, “ஆம்; இருக்கிறது; ஆனால், துரைசானி அம்மாள் வெளியில்போக காத்துக்கொண்டிருப்பார்களே என்று தான் கவலையாக இருக்கிறது” என்றார்.

துரை, “நான்தான் தினம் உலாவப் போகிறேனே. அவசர காரியம் இருந்தால் நான் போகாமல் நின்று விடுகிறேன். துரைசானியை மாத்திரம் அனுப்புகிறேன்” என்ற வண்ணம், தமக்குப் பின்னால் நின்ற துரைசானியிடம் திரும்பி, “எனக்கு அவசரமாக செய்யவேண்டிய வேலை வந்துவிட்டது; நீ மாத்திரம் போய்விட்டுவா’ என்று சொல்ல, அவள் புறப்பட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.

துரையும் தாசில்தாரும் உட்புறம் சென்று நாற்காலியில் உட்கார்ந்து கொண்டனர். தாந்தோணிராயர் தம்முடைய சட்டையிலிருந்த தந்தியை எடுத்து கலெக்டரிடம் நீட்டினார். துரை அதை வாங்கி ஆவலோடு படித்தார். முதலில் விஷயத்தைப் படிக்காமல், அது யாரால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதைக் கவனித்துப் பார்த்தார். அது சென்னையிலிருந்து யாரோ ஒருவரிடத்திலிருந்து டிப்டி கலெக்டருக்கு வந்ததாக அறிந்தார்; பிறகு விஷயத்தைப் படித்தார். தந்தி அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. “நேற்றைக்கு முந்திய நாளிரவு, நான் சேலத்திற்கு போயிருந்த காலத்தில், நீர் இங்கு வந்து உம்முடைய பெண்ணை அழைத்துக்கொண்டு போனதாக என் சகோதரிகள் சொல்லுகின்றார்கள். பெண்ணை ஒரு வாரத்திற்கு முன் கொணர்ந்து விட்ட நீர் இவ்வளவு சீக்கிரமாகவும் எவரிடமும் சொல்லாமலும், எங்களுடைய சம்மதியில்லா மலும், அழைத்துப்போன காரணமென்ன? உடனே தந்தியனுப்பவும்” என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படித்து முடித்த பின்னர் துரை, “என்ன ஒன்றும் நன்றாக விளங்கவில்லையே! வரகுசாமி என்று கையெழுத்துச் செய்யப் பட்டிருக்கிறதே! அந்த மனிதர் யார்?” என்றார்.

மே.கா.I–16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/243&oldid=1250991" இலிருந்து மீள்விக்கப்பட்டது