பக்கம்:மேனகா 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மேனகா

இல்லையாம்; இப்பேர்பட்ட கீழ்ச்சாதி நாய்க்கு மனதிரக்கம் உண்டாகாதாம். அவர் சொன்ன ஆபாசமான வார்த்தைகளை வாயில் வைத்துச் சொல்வதுகூட அவமானம்; இப்படிப்பட்ட மனிதர் நாளைக்கு தாம் ஒன்றும் சொல்ல வில்லையே யென்று சொன்னாலும் சொல்லிவிடுவார். என்னவோ இந்த மனிதருக்கு கெட்டுப்போகும் காலம் கிட்டிவிட்டதென்று நினைத்து நான் பதில் பேசாமலிருந்து விட்டேன்- என்றார்.

அதைக் கேட்ட துரைக்கு வீராவேசம் பொங்கியெழுந்து கை,கால், மீசை முதலியவை துடித்தன. கண்கள் கோவைப் பழமாகச் சிவந்தன. அதுவரையில் அவர் அத்தகைய இழிவான சொற்களைக் கேட்டறியாதவர். ஆகையால் அது சகிக்கக்கூடாத அவமானமாயிருந்தது. அவர் தம்முடைய படபடப்பை அடக்கிக்கொள்ள பத்துநிமிஷ நேரமானது. வெங்கம்பட்டி வாண்டையார் அவரைச் சீமையில் கண்டது உண்மை. ஆகையால், சாம்பசிவம், அவ்வாறு நிச்சயமாகச் சொல்லியிருப்பார் என்று துரை எண்ணிக்கொண்டார்.

துரை:- சரி; தூஷித்ததை விடுத்து மேலே நடந்த விஷயத்தைச் சொல்லும்; அவருக்கு எதற்காக ரஜா வேண்டுமென்று கேட்டாராம்? -

தாசில் :- அவருடைய பெண்ணுக்கு உடம்பு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், அவர் உடனே வந்தால் முகத்தில் முழிக்கலாம் என்றும் தந்தி வந்திருப்பதாக என்னிடம் பெரும் புளுகாய்ப் புளுகினார். காற்றில் பறந்து வந்து அவர் வீட்டில் முற்றத்தில் கிடந்த இந்தத் தந்தியை நான் தற்செயலாகக் கண்டேன். உங்களுக்குக் காட்டலாம் என்று எடுத்து வந்தேன்.

துரை:- பெண்ணைத்தான் இவர் இங்கே அழைத்து வந்துவிட்டாரே, பெண் நோய் கண்டிருக்கிறாள் என்று சொல்லி ரஜா வாங்கிக்கொண்டு பட்டணம் போவதேன்? எனக்கொன்றும் விளங்கவில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/246&oldid=1250926" இலிருந்து மீள்விக்கப்பட்டது