பக்கம்:மேனகா 1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மேனகா

நான் மறக்கமாட்டேன். தங்கள் உத்தரவுப்படி நடக்க நான் கடமைப்பட்டவள். நான் போய்வருகிறேன். இதுவே நான் தங்களைக் கடைசியாகப் பார்ப்பது; உத்தரவு பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறிக்கொண்டு எழுந்து விசையாக இரண்டோர் அடிகள் வைத்தாள். பெரிதும் வெட்கி அவமானம் அடைந்த அவன், வழிமறித்துக் குறுக்கில் நின்று, “கடைசியாகப் பார்ப்பதா! எங்கே போகிறாய்? உன்னை விட்டுப் பிரிந்து நான் ஒரு நிமிஷமும் உயிருடன் இருப்பேனா? என் சீமாட்டி! கோபித்தது போதும்; உட்கார்ந்துகொள்; இந்த நடுராத்திரியில் எங்கே போகிறாய்? இப்படியே படுத்துக்கொள்” என்றான்.

நூர்ஜ:- எங்கே போகிறேனா! நான் மேனகாவின் வீட்டுக்குப் போகவேண்டாமா? மறந்துவிட்டீர்களா?

நைனா:- (அன்பாக) சே! நீ போகவேண்டாம்; நானே பெட்டி வண்டியில் வைத்து அவளைக் கொண்டுபோய் அவளுடைய வீட்டில் விட்டு வருகிறேன்.இதற்காக நீ ஏன் போக வேண்டும்?

நூர்ஜ:- இப்படி முன்னுக்குப்பின் விரோதமாக நீங்கள் பேசினால் நான் எதைச் செய்கிறது? மேனகாவுக்குப் பதிலாக அவளுடைய புருஷனிடம் என்னை அனுப்புகிறேன் என்று சொன்னீர்களே! அது ஞாபகமில்லையா? தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்யாமல் அடிமையாகிய நான் வேறு எதற்காக இருக்கிறேன்? உத்தரவு பெற்றுக்கொள்கிறேன் என்று மேலும் நடந்தாள். கூர்மையான அம்பால் அடிக்கப்பட்ட பறவையைப்போல நைனாமுகம்மது ஒரு நிமிஷம் தத்தளித்துத் தடுமாற்றம் அடைந்தான் தன்னுடைய பிழையை மறைக்கப் புன்னகை செய்தான். ஆனால், முகத்தில் அசடு வழிந்தது. குற்றமுள்ள மனதாகையால் தன் வினை தன்னையே சுட்டது. என்றாலும் அச்சத்தினால் தூண்டப்பட்டவனாய் விரைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/260&oldid=1251342" இலிருந்து மீள்விக்கப்பட்டது