பக்கம்:மேனகா 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டதும் பொய் விண்டதும் பொய்

243

தோடினான். வாயிற் படியைக் கடந்துகொண்டிருந்த நூர்ஜஹானின் இடையில் கையைக்கொடுத்துக் குழந்தையை எடுப்பது போலத் தூக்கிக்கொணர்ந்து கட்டிலின் மேல் பலவந்தமாக உட்காரவைத்து, “நூர்ஜஹான்! என்ன இது? என்றைக்கும் என் மனம்போல் நடப்பவள் இன்றைக்கு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாயே! இது ஆச்சரியமாகவே இருக்கிறது! நான் கபடமாக அவளிடம் பேசியதை நீ உண்மை யென்று நினைத்து இப்படி கோபிக்கிறாயே! உன்னை அன்னிய புருஷனிடம் அனுப்ப நான் பேடி யென்று நினைத்தாயா? வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தைகளை யெல்லாம் நிஜமாக நினைத்துக்கொள்ளலாமோ? எவ்வளவோ படித்த புத்திசாலியான நீ இப்படிப் பிணங்குவது சரியல்ல” என்று கூறிக் கெஞ்சி மன்றாடினான்.

நூர்ஜ:- இப்போதும் தங்களுடைய சொற்படிதானே செய்யப்போகிறேன். ஏன் என்னை இப்படி முரட்டுத்தனமாக கட்டாயப் படுத்துகிறது? ஆண்பிள்ளையாகிய உங்களுக்கு உடம்பில் பலம் அதிகம்; அபலைகளாகிய பெண்டு பிள்ளை களைக் காப்பாற்றும் பொருட்டு ஆண்பிள்ளைகளுக்கு ஆண்டவன் அதிக பலத்தைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் பெண்டுபிள்ளைகளை வஞ்சித்துத் தம்மிச்சைப்படி வற்புறுத்துவதற்கு அந்தப் பலத்தை உபயோகிக்கிறீர்கள். உங்களுக்கு அதிக பலமிருக்கிறது என்று அதன் உதவியால் உங்கள் விருப்பமே சட்டமாகச் செய்கிறீர்கள். நீங்கள் எங்களது கண்ணிற்கு எதிரே விபச்சாரம் செய்தாலும் நாங்கள் அதற்கு அநுசரணையாக இருந்து காதலராகிய உங்கள் இருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும்; ஆனால், நாங்கள் மாத்திரம் மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இது என்ன நியாயமோ தெரியவில்லை. இது வலுக் கட்டாயமான நியாயமன்றி மனிதருடைய பகுத்தறிவுக்குக் கொஞ்சமும் பொருந்தாத நியாயம். அன்னிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/261&oldid=1251343" இலிருந்து மீள்விக்கப்பட்டது