பக்கம்:மேனகா 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

259


சாம்பசிவம் முன்னும் கனகம்மாள் பின்னுமாக இருவரும் உட்புறஞ் சென்றனர். கூடத்தில் நின்றுகொண்டிருந்த சகோதரிமார் இருவரும் அவர்களைக் கண்டவுடன் பெரிதும் அருவருப்பைக் காட்டிய முகத்தோடு, “வாருங்கள்!” என்று ஒரு உபசார வார்த்தை கூடச் சொல்லாமல் அசைந்தாடிக்கொண்டு அலட்சியமாக சமையலறைக்குள் நடந்தனர். ஊஞ்சற் பலகையில் இருந்த சாமாவையர் மாத்திரம் திடுக்கிட்டெழுந்து டிப்டி கலெக்டருக்கு மரியாதை செய்து, “வாருங்கள் அண்ணா! வாருங்கள் பாட்டியம்மா!” என்று அன்போடு இருவரையும் வரவேற்று உபரசணை செய்தார்.

சந்திர பிம்பம்போல இனிமையே வடிவாகத் தமது பெண்மணி மேனகா தம்முன் தோன்றுவாளோ வென்று நினைத்து மனப்பால் குடித்தவராய் வந்த அவர்களுக்கு அந்த வீடு இழவு வீழ்ந்ததனால் பாழ்த்துப்போன வீட்டைப்போலத் தோன்றியது. பெருந்தேவி கோமளம் இருவரும் எந்த நாளிலும் அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பேசிப் பழகியோர் அல்லர். என்றாலும், வரும்போது “வாருங்கள்” என்று சொல்வது மாத்திரமுண்டு. அந்த வாயுபசரணையும் இப்போது இல்லாமற்போனது. தமது பெண் போனமையால் அந்த மரியாதையும் அவளுடன் போயிருப்பதாக அவர்களிருவரும் நினைத்து அதைப்பற்றிச் சிறிதும் மனவருத்தங் கொள்ள வில்லை. அவர்களுடைய மனம் பெண்ணைப் பற்றிய கவலையால் பெரிதும் உலை பட்டு அவளைப்பற்றி எவ்விதமான செய்தியைக் கேட்போமோ வென்று கரைகடந்த ஆவல் கொண்டு தத்தளித்தது. அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய்த் தோன்றியது. அவ்விருவரும் எதிரிலிருந்த தண்ணீர்க் குழாயில் கால்களை அலம்பிக் கொண்டு கூடத்திற் புகுந்தனர். சாம்பசிவம் ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்தார். கனகம்மாள் ஒரு கம்பத்தருகில் நின்றாள். அதற்குள் சாமாவையருடைய முகம் முற்றிலும் மாறுதல் அடைந்தது; மனம் கலங்கியது. அவர்களிடம் எவ்விதமாகப் பேசுவதென்பதை அறியாமல் தடுமாற்றம் அடைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/277&oldid=1251359" இலிருந்து மீள்விக்கப்பட்டது