பக்கம்:மேனகா 1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

மேனகா

கேட்காதிருக்கவும் அவளுக்குச் சகிக்கவில்லை; அதைக் கேட்டவுடனே, “அவள் இல்லை” என்னும் மறுமொழி வந்து விடுமோ வென்று தயங்கி, கடைசியில் அதைக் கேட்டுவிட்டாள்; சாமாவையர் என்ன செய்வார்? கையுங்களவுமாக பிடிபட்ட கள்ளனைப்போல விழித்துச் சிறிது நேரம் தவித்தார்; பிறகு, “பெண் இங்கிருந்தால், வராகசாமிக்கு ஏன் இந்த ஆபத்து வருகிறது? பெண் போனவிடந்தான் தெரியவில்லை” என்றார்.

கனகம்மாள் இன்னமும் அதை நம்பாமல், “ஆனால் அவள் இப்போது உள்ளே இல்லையா?” என்று பேதைமைப் பெருக்கால் மறுபடியும் வினவினாள்.

சாமாவையர் “இல்லை” யென்று விடை கூறினார். ஆகா! அவர்களுடைய மனதின் குழப்பம் பெருங் குழப்பமாயிற்று! அவர்கள் தீத்தணலின் மேல் விடப்பட்டோரைப் போலாயினர். பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் ஒரே காலத்தில் துன்பம் சம்பவித்த விஷயம் ஒரு நிமிஷத்தில் அவர்களுடைய தேகத்தைச் சீர்குலைத்து, நெஞ்சைப் பிளந்து, இருதயத்தைச் சின்னாபின்ன மாக்கிவிட்டது. பேசமாட்டாமலும், எவ்வித யோசனையும் செய்ய மாட்டாமலும் அப்படியே சோர்ந்து அசைவற்றுச் சாய்ந்து விட்டனர். ஒரு நிமிஷமான பிறகு சாம்பசிவம், “அப்படியானால் நான் இங்கே வந்து மேனகாவை அழைத்துப் போனேனென்று இவர்கள் மாப்பிள்ளையிடம் சொன்னதாக எனக்குத் தந்தி வந்ததே! அதென்ன சங்கதி? அந்தத் தந்தியை யார் கொடுத்தது?” என்றார்.

சாமா:- அதை வராகசாமிதான் கொடுத்தானாம். நான்காம் நாள் வராகசாமி ஒரு கேஸின் விஷயமாக சேலம் போனான். ராத்திரி 8 மணி வண்டிக்கு நானும் அவனுடன் போய் அவனை ரயிலில் ஏற்றிவிட்டு ஒன்பது மணிக்குத் திரும்பி வந்தவன், வராகசாமிக்கு ரயில் கிடைத்துவிட்டதென்று இவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போக நினைத்து இங்கே வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/280&oldid=1251362" இலிருந்து மீள்விக்கப்பட்டது