பக்கம்:மேனகா 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

263

அப்போது கோமளம் தூங்கிக் கொண்டிருந்தாள்; பெருந்தேவியம்மாள் மிகவும் வருத்தத் தோடு உட்கார்ந்திருந்தாள்; என்னவென்று கேட்டேன். அதற்குக் கொஞ்சநாழிகைக்கு முன் நீங்கள் ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் வண்டியிலே இருந்துகொண்டு, வெள்ளி வில்லை தரித்த ஒரு சேவகனை உள்ளே அனுப்பி, மேனகாவை அழைத்து வரச்சொன்னதாகவும், உடனே மேனகா வெளியில் போய் பெட்டி வண்டிக்கருகில் நின்று உங்களோடு கொஞ்ச நாழிகை பேசிக்கொண்டிருந்துவிட்டு அவளும் வண்டியில் ஏறிக்கொண்டதாகவும், பிறகு வண்டி போய்விட்டதாகவும் பெருந்தேவி என்னிடம் தெரிவித்தாள். மேனகா தன்னிடம் சொல்லிக்கொள்ளாமற் போனதைப்பற்றி பெருந்தேவியம்மாள் வருத்தப்பட்டுக்கொண்டாள். நீங்கள் எங்கேயோ அறிமுகமான இடத்துக்கு மேனகாவுடன் போய்விட்டுத் திரும்பி வந்துவிடுவீர்களென்று இவளுக்கு சமாதானம் சொல்லிவிட்டு நான் போய்விட்டேன். மறுநாளும் நீங்கள் வராமையால், உங்களுக்கு அறிமுகமானவர் வீட்டிலெல்லாம் போய் நாங்கள் விசாரித்துப் பார்த்தோம். ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நேற்று வராகசாமி வந்தான்; உடனே உங்களுக்குத் தந்தி கொடுத்தான்- என்றார்.

அதைக் கேட்ட சாம்பசிவம் சகிக்கவொண்ணா ஆச்சரியத்தையும், திகைப்பையுங் கொண்டு, “என்ன கண்கட்டு வித்தையா யிருக்கிறதே! நானாவது இங்கே வரவாவது! அன்றையதினம் நான் அம்பாள் சத்திரத்திலல்லவா முகாம் செய்திருந்தேன்; இங்கு வர எனக்கு ரஜா ஏது? ரஜா இல்லாமல் நான் இங்கு வரமுடியுமா? ஒரு வாரத்துக்கு முன்னால் தானே நான் இங்கே பெண்ணைக் கொண்டு வந்து விட்டேன். அதற்குள் இவர்களுடைய அநுமதி யில்லாமல் அவளை அழைத்துப் போவேனோ! என்னகென்ன பைத்தியமா? இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிற தென்னும் சங்கதியா யிருக்கிறதே!” என்று கூறி மேலும் பேசமாட்டாமல் மதிமயக்கம் கொண்டு சாய்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/281&oldid=1251363" இலிருந்து மீள்விக்கப்பட்டது