பக்கம்:மேனகா 1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

271

செய்தனவே யொழிய குதிரையின் ஒட்டத்தில் எவ்வித மாறுபாடும் உண்டாகவில்லை. அடிகள் அதிவேகமாக படப்பட குதிரையின் நடை தளர்ந்த நடையானது. கிழக்குதிரையின் முதுகில் அவன் இன்னம் சிறிது தாராளமாக அடிகளைச் சமர்ப்பித்திருந்தால் குதிரை ஈசுவரனைக் குறித்துத் தவம் செய்து இன்னம் அதிகமான பலத்தையும் பாலியத்தையும் பெற்று வர அடுத்த உலகம் சென்றிருக்கும்; எதிர்த்த வீட்டு திண்ணையிலிருந்த போலீஸ் ஜெவான்களும் வண்டியில் பின் தொடர்ந்து வந்தனர்.

வண்டிக்குள்ளிருந்த தாயும் பிள்ளையும் அப்படியே பிரமித்து வாய் திறக்கவும் மாட்டாமல் உட்கார்ந்திருந்தனர். மேனகாவின் விஷயம் அவர்களுக்கு இன்னதென்று நன்றாய் விளங்கவில்லை. பெருந்தேவியம்மாளின் தூஷணையிலிருந்து அவளுடைய கற்பிற்குக் குறைவான விஷயம் ஏதோ வெளிவந்திருப்பதாக மாத்திரம் ஒரு சிறிது தெரிந்தது; மேனகாவின் நற்குண நல்லொழுக்கத்தையும், கற்பின் உறுதியையும், மேன்மையான மனப்போக்கையும் அவர்கள் நன்றாக அநுபவத்தில் உணர்ந்தவராதலின், அது சுத்தக் கட்டுக் கதையாகவே இருக்க வேண்டு மென்று நினைத்தனர். மேனகா வைப்பற்றி அப்படி அவதூறாக நினைக்க அவர்களுடைய மனம் துணியவில்லை. மகா புனிதவதியான அந்தக் கோமளாங்கியின் கற்பைச் சந்தேகித்தால், சந்தேகிப்போரின் சிரத்தில் இடியே வீழ்ந்து அழித்து விடுமென்று நினைத்தனர். அவர்கள் அவ்வாறு எண்ண மிட்டிருந்த தருணத்தில் வண்டி மேன்மேலும் சென்றது. தொளசிங்கப் பெருமாள் கோயில் தெருவின் தொடர்ச்சியான சாத்தானித்தெருவைக் கடந்து அப்பால் மேற்கு முகமாய் திரும்பி பீட்டர் சாலையிற் செல்ல ஆரம்பித்தது. அடுத்த நிமிஷத்தில், அங்கே இடது பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் திடீரென்று நின்றது. சாமாவையர், “சாயிபு! ஏன் வண்டி நின்று விட்டது?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/289&oldid=1251377" இலிருந்து மீள்விக்கப்பட்டது