பக்கம்:மேனகா 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பசிவ ஐயங்கார்

11

தெரியும். முன் பின் தெரியாத இடத்தி லெல்லாம் சம்பந்தம் செய்து கொண்டால் அது இப்படித்தான் முடியும். போனது போகட்டும்; நம்முடைய குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தாயே, அதுவே போதும், அவள் இங்கேயே இருக்கட்டும். நல்ல காலம் வராமற் போகாது. அவனுக்கு எப்போது நல்ல புத்தி வரப்போகிறதோ, பார்க்கலாம்” என்ற வண்ணம் தன் ஆத்திரத்தை அடக்க வல்லமை அற்றவளாய்க் கண்ணுங் கண்ணிருமாய்க் கனகம்மாள் கீரைத்தண்டோடு சமையலறைக்குள் சென்றாள். துயரமே வடிவமாய் உட்கார்ந்திருந்த சாம்பசிவஐயங்கார், மேன்மாடியில் எவரோ விரலை மெதுவாய்ச் சொடுக்கித் தமக்குச் சைகை காட்டியதையுணர்ந்து மேலே நிமிர்ந்து பார்த்தார். அழகே வடிவாய்த் தோன்றிய பொற்கொடி போன்ற ஒரு பெண்மணி அங்கிருந்த வண்ணம் தன் சிரத்தை மாத்திரம் ஒரு பலகணியின் வழியாக நீட்டினாள். அவளுடைய கண்கள் அவரை வருந்தி அழைத்தன.

“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடந்
துற்றே யசையக் குழையூசலாடத் துவர் கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே.”

என்னத் தோன்றிய அம் முகத்தை நோக்கிய டிப்டி கலெக்டரின் துயரமும், முக வாட்டமும் பறந்து போயின; இன்ப மயமானார். பத்தரை மாற்றுப் பைம்பொன்னைப் பழித்த அப் பூங்கொடியின் மேனி நிறத்தை அவளால் உடுத்தப் பெற்ற மேகவருணப் பட்டாடையும் இடையை அலங்கரித்த தங்க ஒட்டியாணமும் ஆயிர மடங்கு வனப்பித்தன. வயிரக் கம்மல், வயிர மூக்குப் பொட்டு முதலிய உயர்தர இழைகள் அவளது வதனத்திற் சுடர்விட் டெரித்தன; கறுஞ் சாந்துத் திலகமே கண் கொள்ளாச் சிங்காரமாய்க் காண்போர் மனதிற் காமத் தீயை வளர்த்தது. அவளுக்கு முப்பது வயது நிரம்பியதாயினும், அவளது தோற்றம் அவளுக்கு வயது பதினேழேயென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/29&oldid=1248096" இலிருந்து மீள்விக்கப்பட்டது