பக்கம்:மேனகா 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

மேனகா

சர்க்காரை ஏமாற்றிப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார். தவிர அவர் பலரிடம் லஞ்சம் வாங்கினதாக அநுமானிக்க பல சாட்சிகளும் இருக்கின்றன. இவற்றால் அவர் உத்தியோகத்தினின்று நீக்கப் படத்தக்கதும், நியாயஸ்தலத்தில் தண்டனை பெறத் தகுந்தது மான பல குற்றங்களைச் செய்திருப்பதாக நினைக்க இடமிருக்கிறது. அவற்றைப்பற்றி நாம் செய்யப்போகும் விசாரணை முடியும்வரையில், அவரை வேலையிலிருந்து நீக்கி வைத்திருக்கிறோம். தம்மிடமிருக்கும் சர்க்கார் சம்பந்தமான காகிதங்கள் சீல்முகர் முதலிய யாவற்றையும் இந்த உத்தரவை அவர் பெற்ற இரண்டு நாட்களுக்குள் தஞ்சை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டியது:-

என்று கமிஷனர் முற்பகுதியைப் படித்துக் காட்டினார். அதைக் கேட்ட சாம்பசிவத்தின் மனோநிலைமையை மனிதர் யூகித்தல் வேண்டுமேயன்றி, அதை உள்ளவாறு விரித்தெழுதத் தேவையான அறிவாற்றல் இந்த எழுதுகோலுக்கு இல்லையென்று சொல்வது பொய்யாகாது. அவர் மிஞ்சிய வியப்பும் திகைப்பும் கொண்டு பேசமாட்டாமல் அப்படியே கல்லாய்ச் சமைந்து போனார். அவமானத்தால் அவருடைய தேகமும் மனமும் குன்றிப்போயின. முகத்தைக் கீழே கவித்துக்கொண்டார்; உடம்பு பதைபதைத்தது. விழிகளில் தீப்பொறி பறந்தது. அது வேறு எவராலோ அனுப்பப்பட்ட பொய்த் தந்தியா யிருக்க வேண்டுமென்று நினைத்தார். தாம் எத்தகைய குற்றமும் செய்யாதிருக்கையில், கலெக்டர் தம்மீது பொய்க்குற்றம் சுமத்தி, வேலையினின்றும் நீக்கியிருக்கிறார் என்பதை அவருடைய செவிகள் நம்பவில்லை. அது உண்மையா யிருக்குமோ வென்றும், அது யாருடைய விஷமமோவென்றும் யோசித்தார். ஒன்றுந் தோன்றவில்லை. சாமாவையர் ஆங்கில பாஷை சிறிது உணர்ந்தவராதலால், அவர் அங்கு நடந்த சம்பாஷணையின் கருத்தை அறிந்து கொண்டார். கனகம்மாள் விஷயம் என்னவென்பதை மெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/294&oldid=1251382" இலிருந்து மீள்விக்கப்பட்டது