பக்கம்:மேனகா 1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

279

வெளியில் இருக்கச் செய்து தாம் மாத்திரம் பெரிய டாக்டர் துரையிடம் போய், தாம் தஞ்சாவூர் டிப்டி கலெக்டரென்றும், வண்டியில் அடிபட்டுக் கிடக்கும் தமது மருமகப் பிள்ளையை அவசரமாகப் பார்க்கவேண்டுமென்றும் கூற, அவர் இரக்கங்கொண்டு, போய்ப் பார்க்க அநுமதி கொடுத்தார். ஆனால், வராகசாமியுடன் பேசி, அவனை அலட்டக்கூடாதென்றும், பதினைந்து நிமிஷத்திற்கு மேல் இருக்கக் கூடாதென்றும் நிபந்தனை கூறி அவ்வாறு அநுமதித்தார்.

உடனே மூவரும் நோயாளிகள் கட்டில்களிற் படுத்திருந்த ஒரு அறைக்குள் சேவகனால் நடத்தப்பட்டனர். வராகசாமி படுத்திருந்த இடத்தை சாமாவையர் அறிவார் ஆதலின், அவர் மற்ற இருவரையும் அவ்விடத்திற்கு அழைத்துப் போனார். ஆனால், கட்டிலில் படுத்திருந்த மனிதன் வராகசாமிதானா வென்னும் சந்தேகம் அவர்களது மனதில் உதித்தது. அவ்வளவு அதிகமாக அவன் உருமாறிப்போய், கண்களைத் திறவாமல் முற்றிலும் உணர்வற்று தளர்வடைந்து உயிரற்றவன் போலத் துவண்டு கிடந்தான்; உடம்பில் ஏராளமாகத் துணிக்கட்டுகள் காணப்பட்டன. அவன் அத்தனை காயங்களை அடைந்தான் என்பதை அவற்றிலிருந்து யூகித்துணர்ந்தவுடன்அவர்களது உயிரே கிடுகிடென்று ஆடித் தத்தளித்தது; குலைநடுக்கம் எடுத்தது; மயிர் சிலிர்த்தது; கண்களில் கண்ணீர் பொங்கிக் கடகடவென்று கன்னங்களில் வழிந்தது. அவர்களது மனம் கொதித்தது: வயிறு பற்றி எரிந்தது; இருவரும் அந்த நிலைமையில் என்ன செய்வர்? அந்தப் பிணியிலிருந்து அவனை மீட்பதற்குத் தங்களது உடல் பொருள் ஆவி மூன்றையும் கொடுத்துவிடவும் தயாராக இருந்தனர். அந்தப் பரிதாபகரமான தோற்றத்தைக் காண, அவர்களுடைய முந்திய விசனங்கள் யாவும் புலியின் முன் பூனைக் குட்டிக ளென்ன ஓடி யொழிந்தன; அவர்களது மனம் நைந்திளகி ஏங்கியது. இருவரும் கட்டிலுக்கருகில் நின்று மாறிமாறி காயங்களையும் முகத்தையும் உற்று நோக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/297&oldid=1251385" இலிருந்து மீள்விக்கப்பட்டது