பக்கம்:மேனகா 1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

283

தோன்றிய உக்கிர நரசிம்மமூர்த்தி தூணிற்குள்ளிருந்து கோபநகை செய்ததைப்போல, அங்கிருந்தோர் நடுங்கும்படி சாம்பசிவம் கலகலவென்று சிரித்தார். கடிதங்களில் காணப்பட்ட விஷயம் முற்றிலும் முழுப்புரட்டான கற்பனை யென்று அவர் முன்பே உறுதி செய்துகொண்டார். மேனகா தஞ்சையிலிருந்த ஒரு வருஷ காலத்தில் கணவனது பிரிவாற்றாமையால் பட்ட பாட்டையும் ஊணுறக்கமற்றும் மேன்மாடியை விட்டுக் கீழிறங்காமலும் கிடந்து ஏங்கித் துரும்பாய் மெலிந்து தன்னை வதைத்துக் கொண்டதையும் நன்றாக அறிவார் ஆதலின், அவர்களுக்கு விபசார தோஷம் கற்பிப்பது, மகா பாபமான காரியமென்று எண்ணினார். அவளைப் பற்றி மனதாலும் அவ்வாறு நினைப்பது கொடிய பாதகமென்று உறுதியாக நினைத்தார். மகா உத்தமியான அவள் விஷயத்தில் எத்தகைய தகாத நினைவும் கொள்ள அவருடைய மனது கூசியது. தமது விஷயத்தில் தந்தியில் அபாண்டமான பொய் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கையில், தமது பெண் விஷயத்திலும் இப்படிக் கற்பனையான குற்றம் சுமத்தப்படுவது ஒரு பெரிய வியப்பாகாது என்றும், ஒன்று எப்படி முற்றிலும் புரட்டோ, அவ்வாறே மற்றதும் புரட்டானது என்றே நிச்சயித்தார். கடித விஷயம் நாத்திமார்களாலேயே உற்பத்தி செய்யப்பட்டதென்றும், கனகம்மாள் முதல்நாள் கூறியபடி அவர்கள் மேனகாவைக் கொன்றே இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவர்கள் போலீஸில் பதியவைக்காமையும், அந்த நினைவையே உறுதிப்படுத்தியது. தமது அருமைப்பெண்ணை தாம் இனி காண்போமா, அவளை எப்படிக் கொன்றிருப் பார்களோ என்ற எண்ணங்கள் உதிக்க உதிக்க அவருடைய உடம்பு அப்பொழுதே வெடவெடவென்று துடித்தது. உடனே போலீஸில் பதியவைத்து, வராகசாமியின் வீட்டைச்சோதனை போட்டு விதவைகள் இருவரையும் கைதுசெய்து நன்றாக விசாரணையைத் தொடக்க வேண்டுமென்று நினைத்தார். தனது சகோதரிகளை அவமானப்படுத்தியதைப்பற்றி வராகசாமி தங்கள் மீது கோபங்கொள்ளக் கூடுமாயினும், தாம் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/301&oldid=1251394" இலிருந்து மீள்விக்கப்பட்டது