பக்கம்:மேனகா 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராகு, கேது, சனீசுவரன்

13

உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றேறக் குறைய பதினெட்டு வயதிருக்கலாம். அவளுடைய சிரத்தின் உரோமமும், ஆபரணங்களும் விலக்கப்படாமலிருந்தன. அவளுடைய கண்களும், கன்னங்களும் குழிந்திருந்தமையாலும், மனத்தின் வனப்பும், மஞ்சளின் வனப்பும் இல்லாமையாலும் அவள் பேய்க்கொண்டவளைப் போல காணப்பட்டாள். தசைப் பற்றுத் துரும்பு போலிருந்த அவளுடைய மேனி, அவள் சூனியக்காரியோ வென்னும் ஐயத்தை உண்டாக்கியது. மண்வெட்டியின் இலையைப்போலிருந்த அவளுடைய பற்களைத் திறந்து அவள் அப்போதைக்கப்போது நகைத்தபோது, இளைக்காதிருந்த பற்களும், சுருங்கிப் போயிருந்த முகமும் முரணி விவகாரத் தோற்றத்தை யுண்டாக்கின. அவள் சிவப்புத் தோலும், வஞ்சக நெஞ்சமும், பொறாமைச் சொற்களும், அற்ப புத்தியும் பெற்றவள். விசனமும், மகிழ்வும், அழுகையும், நகைப்பும், கோபமும், அன்பும், பகைமையும், பட்சமும் அவளுக்கு நினைத்தா லுண்டாகும்; நினைத்தால், மறையும்.

அவளுக்கெதிர்ச்சுவரின் ஓரத்தில் உட்கார்ந்து இன்னொரு விதவை அப்பளம் செய்து கொண்டிருந்தாள். வஞ்சனையின்றி வளர்ந்த ஒதியங்கட்டையைப்போலக் காணப்பட்ட அவள், மொட்டையடித்து முக்காடிட்டிருந்தாள் ஆயினும் முப்பது வருஷங்களையே கண்டவளாயிருந்தாள். யானை இடுப்பும், பானை வயிறும், குறுகிய தலையும், பெருகிய காதும், கிளியின் மூக்கும், ஒளியில்லா பல்லும், உருண்ட கன்னமும், திரண்ட உதடும், குறும்பைத் தலையும், திரும்பாக் கழுத்தும் பெற்ற அந்த அம்மாள் தனது குட்டைக் கைகளும், மொட்டைதலையும் குலுங்கக் குலுங்க அதிவிரைவாக அப்பளம் செய்த காட்சி அற்புதமாயிருந்தது. அவளும் மகிழ்வே வடிவமாய்க் கூச்சலிட்டு நகைத்து ஊஞ்சலிலிருந்த தன் தங்கை கோமளத்தோடு உரையாடிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/31&oldid=1248098" இலிருந்து மீள்விக்கப்பட்டது