பக்கம்:மேனகா 1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

மேனகா

மனிதருடைய பெண்ணாம். மகா சாகலம் செய்து தங்கள் வீட்டாரை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளாம்.

சாம்ப:- பாவம்! யாருடைய பெண்ணோ தெரியவில்லை. சரி; நான் தஞ்சாவூர் போனவுடன் அந்தப் பெண்ணின் பெற்றோர் என்னிடம் வந்து பிராது சொல்லிக்கொண்டு அழுவார்கள்; அவனுடன் கூட இருந்த உங்களுக்கே அவன் போன இடம் தெரியவில்லையே! நான் இதில் என்ன செய்யப்போகிறேன்! சரி, நாழிகை யாகிறது; நாங்கள் போய் விட்டு வருகிறோம். நீர் ஒரு உதவி மாத்திரம் செய்யும்; மாயாண்டிப்பிள்ளை எங்கிருக்கிறான் என்பது உமக்கு இனிமேல் தெரியவந்தால், தஞ்சைக்கு என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்; அதை நான் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் போய் பெண்ணை அழைத்துவருவார்கள்; அப்போது அவனும் இங்கே உங்களிடம் திரும்பி வந்துவிடுவான்” என்றார். வீராசாமி நாயுடுவுக்கும் அது அநுகூலமான காரியமாகத் தோன்றியது; “எஜமான்களின் தயவு மாறாமல் ஏழைமேல் எப்போதும் இருக்க வேண்டும்” என்று பன்முறை வேண்டிக் கொண்டான். உடனே மூவரும் வெளியில் வந்தனர். திண்ணையில் உட்கார்ந்திருந்த பாச்சாமியான் சாயப்பு எழுந்து போய் வண்டியின் மேல் தம் சிம்மாசனத்தில் திடீரென்று உட்கார்ந்தான். நின்றபடியே தூங்கி ஆடி விழுந்து கொண் டிருந்த குதிரை எதிர்பாராத அந்த அசைப்பால் மரக்கிளையி லிருந்து நைந்து விழும் பழம்போல பொத் தென்று கீழே விழுந்துவிட்டது. சாயபுவும் குதிரையின் முதுகின் மேல் குப்புற விழுந்தான். ஆனால், அவனுடைய மீசையில் மண் படுமுன் எழுந்துவிட்டான் என்றாலும், தன்னுடைய குதிரை அப்படிச் செய்து தன்னை அவமானப்படுத்தியது அவனால் சகிக்கக் கூடாத காரியமாக இருந்தது. அதிகரித்த கோபத்தினால் அவனுடைய தாடி மயிர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஈட்டியைப் போல நீண்டு நின்றது; படுத்திருந்த குதிரையின் முகத்தண்டை அவன் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/310&oldid=1251409" இலிருந்து மீள்விக்கப்பட்டது