பக்கம்:மேனகா 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

305

மேனகா வென்பதை அப்போதே அவள் உணர்ந்தாள். தான் தனது இல்லத்தில் படுத்துத்துயில்வதாயும், அதில் பயங்கரமான கனவு கண்டு கொண்டிருப்பதாயும் ஒரு எண்ணம் அவளது மனதில் உதிக்க ஆரம்பித்தது. தனது நாத்திமார்களும், அவர்களது துர்ப்போதனையால் தனது கணவனும் தன்னைக் கொடுமையாய் நடத்தியதும், அவர்கள் சொன்ன சொற்களும், புரிந்த செய்கையாலும் , தான் பிறகு ஒரு வருஷகாலம் தஞ்சையில் தவித்துக் கிடந்ததும், அப்போதே நிகழ்வன போலக் காணப்பட்டன. தான் இன்னமும் தஞ்சையில் இருப்பதாகத் தோன்றியது. அவளது உணர்வு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, முற்றிலும் சிதறிக் குழம்பிக்கிடந்த மனது தெளிவடையத் தொடங்கியது. தான் தனது கணவனிடம் திரும்பி வந்ததும், அவனுடன் ஐந்து நாட்கள் புதிய வாழ்வாக வாழ்ந்து பேரின்பச் சுகமடைந்ததும் தோன்றின. கடைசியில் தனது கணவன் சேலத்திற்குப் போன அன்றிரவு சாமாவையர் தன்னையும் பெருந்தேவியம்மாளையும் நாடகம் பார்க்க அழைத்துச் சென்ற நினைவு மெல்ல மனதில் தலைகாட்டியது. அதன்பிறகு தான் மகம்மதியன் வீட்டில் தனிமையில் விடப் பட்டதும், அங்கு ஒரு யெளவன மகம்மதியன் தோன்றியதும், அதன்பிறகு நேர்ந்த விஷயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அவளது நினைவில் நாடகக் காட்சிகளைப்போலத் தோன்றின. முடிவில், தான் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை புரிய முயன்றதும், அப்போது திடீரென்று ஒருவர் தோன்றிக் கத்தியைப் பிடுங்கிக்கொண்டதும் தெளிவாக விளங்கின. கத்தி பிடுங்கப்பட்ட பிறகு நடந்த தென்ன வென்பது அவளுக்குத் தெரியவில்லை. அதன் பிறகு எட்டு மணிநேரம் இடைவேளை கழிந்ததென்பதை அவள் அறிந்தவளேயன்று. அது இன்னமும் இரவென்றும், முந்திய நிமிஷத்திலேதான் கத்தி பிடுங்கப்பட்டதென்றும் எண்ணினாள். அன்றிரவில் நிகழ்ந்த விஷயங்கள் யாவும், உண்மையில் சம்பவிக்கக்கூடாத அசாதாரணமானவைகள். ஆதலால், அவைகள் நிஜத்தில் நடந்தனவென்று அவள் மனது நம்பிக்கை கொள்ளவில்லை. தான் கனவு காண்பதாகவே அவள் உறுதியாக நினைத்தாள்.

மே.கா.I–21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/323&oldid=1251431" இலிருந்து மீள்விக்கப்பட்டது