பக்கம்:மேனகா 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

மேனகா

ஆனால், அது எதுமுதல் எதுவரையில் கனவென்பதை நிச்சயிப்பதே கூடாமல் குழப்பத்தை உண்டாக்கியது. தான் நாடகம் பார்க்கப் போனதும் அதன் பின்னர் நடந்தவைகளும் கனவா, அன்றி, தான் தகப்பன் வீட்டிலிருந்து திரும்பிவந்ததும், இன்புற்று வாழ்ந்ததும், பிறவும் கனவா, அன்றி, தான் தஞ்சைக்குப் போனதும், அவ்விடத்தில் ஒரு வருஷமிருந்தது முதலியவும் கனவா, அன்றி, தன்னைத் தனது கணவன் முதலியோர் கொடுமையாய் நடத்தியது கனவா என்று அவளுடைய குழப்பம் பெருங்குழப்பமாய்விட்டது. “உலகமே பொய்; அதிலுள்ள பொருட்கள் பொய்; எல்லாம் மாயை, பொருட்களே கிடையாது” என்று மாயா தத்துவத்தைப்பற்றி வாதிப்போருக்கு, தமது தேகமும், தாம் பேசுவதும், தாம் நினைப்பதும், தாம் உணர்வதும் எல்லாமே பொய்யாகத் தோன்றுதலைப்போல, மேனகாவின் மனதிற்கு அப்போது எல்லாம் பொய்யாகவும், மெய்யாகவும் தோன்றியது. பாவம் மனிதருக்கு உணர்வு என்னும் அந்த ஒப்பற்ற ஒரு வஸ்து தனது நன்னிலைமையை இழந்துவிடுமானால், அப்புறம் அவர்கள் மனிதரல்லர். யெளவனம் கட்டழகு காந்தி முதலிய எத்தகைய உயர்வுகளும் அருமை பெருமைகளும் இருப்பினும் அவை சிறிதும் மதிப்பற்றவையாம். அங்ஙனமே ஆனது அவளது நிலைமை. தான் மேனகாதானா, தான் டிப்டி கலெக்டருடைய பெண்தானா என்னும் பெருத்த சந்தேகம் தோன்றியது. கண்களைத் திறந்து தனது உடம்பைப் பார்த்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நினைத்தவளாய், நலிந்த தமது நேத்திரங்களைத் திறந்து தனது மேனியை உற்று நோக்கினாள்; என்ன ஆச்சரியம்! தனது உடம்பு மேனகாவின் உடம்பாகத் தோன்றவில்லை தும்பைப்பூவிலும் அதிகமான வெண்மை நிறத்தைக் கொண்ட மெல்லிய மஸ்லின் துணியொன்று தனது தேகத்தில் ஒரு சுற்றாக அணியப்பெற்றிருந்தது! தனது விலையுயர்ந்த மேகவர்ணப்பட்டாடை, பாப்பு, கொலுசு, காசுமாலை, அட்டிகை முதலியவை தனது தேகத்தில் காணப்படவில்லை. அவற்றை தனது தேகத்திலிருந்து எவரும் விலக்கியதாகவும் அவளுக்கு நினைவுண்டாகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/324&oldid=1251432" இலிருந்து மீள்விக்கப்பட்டது