பக்கம்:மேனகா 1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

313

செய்து கொள்ள முயன்றது என்பதும், அப்போதே கத்தி பிடுங்கப்பட்டது என்பதும் நினைவிற்கு வந்தன. இடைவேளையான அவ்வளவு நீண்ட காலம் தான் உணர்வற்றோ துயின்றோ இருந்திருக்க வேண்டு மென்பதும், அப்போதே உடை மாற்றப்பட்ட தென்பதும் ஒருவாறு விளங்கின. தனது பெயரைச் சொல்லி அன்பே நிறைவாக அழைத்த பெண்மணி யாவள் என்பதை அறிய ஆவல் கொண்டவளாய், மிகவும் பாடுபட்டுத் தனது வதனத்தைச் சிறிது இப்புறம் திருப்பி தனக்கருகில் இருந்தவளை நோக்கினாள். அருகில் உட்கார்ந்திருந்த யெளவன மங்கை அந்தக் குறிப்பை யறிந்து, திரும்பவும் முன்போலவே அன்பாக அழைத்து, “அம்மா! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது தெரிவி; நாங்கள் யாரோ அன்னியர் என்று நினைக்காதே; நாங்கள் உன் விஷயத்தில் அந்தரங்கமான அபிமானம் உள்ளவர்கள்” என்று மிக்க உருக்கமாகக் கூறி, தனது கரத்தால் அவளது கன்னம் கரம் முதலிய விடங்களை அன்போடு மிருதுவாக வருடினாள். விடுபடும் வழியின்றி கொடிய நரகத்தினிடையில் கிடந்து தவிக்கும் ஒருவனது வாயில் ஒரு துளி தேன் சிந்தியதைப்போல, அத்தனை துன்பங்களின் இடையே அவ்வளவு மனமார்ந்த உண்மை அன்பை ஒருவர் தனக்குக் காட்டக் கிடைத்ததை நினைத்த மேனகா ஒரு நிமிஷம் தன்னை மறந்து ஆநந்தப் பரவசம் அடைந்தாள். அழகே வடிவாய் பூரண சந்திரோதய மென்ன ஜெகஜ்ஜோதியாய் கந்தருவ மாதைப்போல தனக்கருகில் உட்கார்ந்திருந்த பெண்மணியின் கபட மற்றதும், மென்மை, உத்தம குணம், பெருந்தகைமை முதலிய அரிய சிறப்புகளைக் கிரணங்களாய்ச் சொரிந்ததுமான அழகிய வதனத்தைக் காண மேனகாவின் மனதில் ஒரு வகையான நம்பிக்கையும், ஆறுதலும் இன்னமும் தோன்றின. காணக் கிடைக்காத அந்த அற்புதமான காட்சி உண்மையானதோ அன்றி பொய்த் தோற்றமோ வென்று உடனே ஐயமுற்றாள். மகா பயங்கரமான நிலையிலிருந்து தான், இரமணீயமான அந்த நிலைமையையடைந்த பாக்கியத்தை நினைத்து நினைத்து பெருமகிழ்வடைந்தாள். அந்த இன்பகரமான நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/331&oldid=1251454" இலிருந்து மீள்விக்கப்பட்டது