பக்கம்:மேனகா 1.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

மேனகா

அவளது புலன்கள் தொய்ந்து எளிதில் தெவிட்டிப் போயின. மனதிலும், உணர்விலும் அந்த மனோகரமான அற்புதக் காட்சி எளிதில் பதிந்தது. அதற்கு முன், தன்னை ஒரு நாளும் கண்டறியாத அப் பெண்பாவை தனக் கருகில் உட்கார்ந்து, தனக்குரிய உபசரணைகளைச் செய்ததும், தன் மீது அவ்வளவு ஆழ்ந்த அபிமானம் காட்டியதும், தனது பெயரைச் சொல்லி யழைத்ததும் மேனகாவின் மனதில் பெருத்த வியப்பை உண்டாக்கின.

அவளது நடத்தை யெல்லாம் வஞ்சக நடத்தை யல்ல வென்பதும், அவள் மகா உத்தம ஜாதி ஸ்திரீ யென்பதும், அவளது முகத்திலேயே ஜ்வலித்தன. அவள் யாவள்? முதல்நாள் இரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு அவள் உறவினளா? பணிப்பெண்ணா? அல்லது அவனுக்கும் அவளுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையா? அது முதல் நாளிரவில் தானிருந்த வீடுதானா? அல்லது வேறிடமா? கத்தி தனது கையினின்று பிடுங்கப்பட்ட பிறகு தனக்கு என்ன நேர்ந்தது? என்பன போன்ற எண்ணிறந்த சந்தேகங்களைக் கொண்டு அவற்றை வெளியிடவும் வல்லமை யற்று, பெரிதும் கலக்கமும், துன்பமும் அடைந்து திரும்பவும் சோர்ந்து காம்பொடிபட்ட ரோஜாவைப்போலக் கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள். பிறகு நெடுநேரம் வரையில் அவள் இமைகளைத் திறக்கவுமில்லை. அவளது தேகம் அசையவுமில்லை. அவள் திரும்பவும் உணர்வற்ற நிலைமையில் வீழ்ந்து விட்டாள்.

மூர்ச்சையிலிருந்து மேனகா தெளிவடைந்ததையும், அவளது வதனம், தேகம் முதலியவற்றின் மாறுபாடுகளையும் மிகவும் ஆவலோடும் சிரத்தையோடும் கவனித்து உணர்ந்த துரைஸானியம்மாள், “நூர்ஜஹான்! நான் வைத்திய சாலைக்குப் போக நேரமாய்விட்டது. இனி இந்த அம்மாளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை; மிகவும் விரைவில் நல்ல நிலைமையை யடைந்து விடுவாள். நான் போய்விட்டு மாலையில் திரும்பவும் வந்து பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/332&oldid=1251455" இலிருந்து மீள்விக்கப்பட்டது