பக்கம்:மேனகா 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மேனகா


சாமா:- சேச்சே இல்லை இல்லை. அதெல்லாம் வம்பாய் முடியும். நம்முடைய தலைக்கு வந்து சேரும்.

பெருந்தேவி:- கோமளம் அது உனக்குத் தெரியாது. சாமாவுக்கும் எனக்குந்தான் தெரியும்.

கோமளம்:- (முகத்தைச் சுளித்துக் கொண்டு) எனக்குச் சொல்லப் படாதோ ? சாமா மாத்திரந்தான் உனக்கு உறவாக்கும்?

பெருந்தேவி:- அது வராகசாமிக்குத் தெரிந்தால் குடி கெட்டுப் போகும்; மண்டையை உடைத்து விடுவான். நீ குழந்தை புத்தியினால் அவனிடம் சொல்லி விடுவாயோ வென்று பயந்து சொல்லாமலிருந்தோம். வேறொன்று மில்லை; நம்முடைய சாமாவின் முதலாளி நைனா முகம்மது மரக்காய னிருக்கிறானே; அவன் தன்தம்பியை இங்கே வேலை பார்க்க வைத்துவிட்டு சிங்கப்பூரிலுள்ள தன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளப் போகிறானாம். அவன் மாமிசம் சாப்பிடுவதில்லையாம். மரக்கறி போஜனமே செய்பவனாம். அவனுக்குப் பிராமணருடைய போஜனத்தில் மிகவும் ஆசையாம். ஆகையால், சமையலுக்காக அவனுக்கொரு பிராமண ஸ்திரீ வேண்டுமாம். நல்ல அழகான சிறு பெண்ணாயிருந்தால் ரூபா. 5,000 ரொக்கமாகத் தருகிறே னென்று சாமா விடத்தில் தெரிவித்தானாம்; நம்முடைய மேனகாவை ரகசியமாய்க் கொண்டு போய்த் தள்ளிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டால் அந்தச்சனியனும் நம்மைவிட்டுத் தொலைந்து போகும்; அதனால் பெருத்த சொத்தும் கிடைத்துவிடும்; இதைத்தான் சாமா என்னிடம் சொன்னான். ஆனால் எனக்கு மனமில்லை; இப்படி வேறொருவனிடம் கொண்டு போய்த் தள்ளுவதைவிட விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடுவது நல்லதென்று நான் சொல்லி விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/38&oldid=1248105" இலிருந்து மீள்விக்கப்பட்டது