பக்கம்:மேனகா 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மேனகா

அழைத்தபோது வராகசாமி குறுக்கில் வந்து மறித்தானாம்; அப்போதே சேவகன்பிடித்துக் கொண்டானாம். அப்படி யல்லவோ அவன் சொல்லுகிறான்.

சாம்ப :- அதெல்லாம் முழுப்புளுகு.

கனகம்:- என்ன இருந்தாலும் அவன் நம்முடைய குழந்தையின் புருஷன். அவனைச் சேவகன் பிடித்துக் கொள்ளுவதென்றால், அது அவமானமாகத்தானே இருக்கும். அதைப்பற்றி நம்முடைய மேனகாவே வருத்தப் படுகிறாளே. அவனுக்கு எப்படி இராது! போனது போகட்டும்; அவன்தான் வீண் பிடிவாதம் செய்கிறான்; நாமும் அப்படியே செய்தால் யாருக்கு நஷ்டம்? வாழையாடினாலும், வாழைக்குச் சேதம், முள்ளாடினாலும் வாழைக்குச் சேதம். இதனால் நமக்குத்தான் துன்பமெல்லாம். அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய்ப் பெண்ணை நாம் எத்தனை நாளைக்கு வைத்திருக்க முடியும்? ஏதாவது அவமானம் வந்துவிட்டால் பிறகு நமக்குத்தானே தலைகுனிவு.

சாம்ப:- அதற்காக என்ன செய்யச் சொல்லுகிறாய்? என்னால் ஒன்றும் ஆகாது.

கனகம்:-நன்றாயிருக்கிறது! நாம் எப்படியாவது நயந்து தான் போகவேண்டும். நாம் பெண்ணைக் கொடுத்தவர்கள்; அவனுடைய கை மேலதான்; நமது கை ஒருபடி இறக்கந்தான். இன்னம் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அடகு வைத்த நகைகளையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்; ஒரு நகைகூட இல்லாமல் பெண் மரம்போல இருக்கிறாளே; என்ன செய்கிறது?

சாம்ப:- அந்த துஷ்ட முண்டைகளிடம் இவள் போனால் துன்பந்தான் சம்பவிக்கும். இனி சுகமாய் வாழப்போகிற தில்லை. முறிந்து போன பால் நல்ல பாலாகுமோ? ஒரு நாளுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/48&oldid=1248115" இலிருந்து மீள்விக்கப்பட்டது