பக்கம்:மேனகா 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனதிற்குகந்த மன்மதன்

39

இருக்கையில் அவன் சொல்வதே சரியென்பார். இருவரும் இருக்கையில், “இதுவும் சரி அதுவும் சரி; வராகசாமி மகா புத்திசாலி; அவன் வக்கீல்; மற்ற எந்தக் கோர்ட்டுத் தீர்மானத்தின் மேலும் அவன் அப்பீல் செய்யலாம். அக்காள் தீர்மானத்திற்கு அப்பீல் கிடையாது” என்று கோமுட்டி சாட்சியாக நயமாகச் சொல்லிவிடுவார்.

மேனகா தன் தகப்பன் வீட்டிற்குப் போய் ஒரு வருஷகாலமாயினும், வராகசாமி தனக்கொரு மனைவி இருந்தாள் என்பதை நினைத்தானோ இல்லையோ கடவுளுக்கே தெரியும். ஆனால் மந்திரிமார் மூவரும் அவனுக்கு பெண்ணை மணம் புரிவிக்க வேண்டுமென்று பன்முறை கூறிய காலத்தில் அவன் அதைப்பற்றி எவ்வித ஆக்ஷேபனையும் சொல்லவில்லை. இவ்வாறு அவன் அவர்களால் சூத்திரப் பாவையைப்போல ஆட்டப்பட்டு வந்தான்.

சாமா வையரும், விதவை மாரும் முன்னொரு அதிகாரத்தில் தமக்குள் பேசித் தீர்மானம் செய்துகொண்ட பிறகு அவர்கள் அவனுடைய மனதை மெல்ல மாற்றி, மேனகாவின் மீது அவன் விருப்பம்கொள்ளும்படி சொற்களைக் கூறி வந்தனர்.

அவன் கச்சேரிக்குப் போகாமல் வீட்டிலிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை பெருந்தேவியம்மாள் அவன் மனதிற்குப் பிடித்த சிற்றுண்டிகள் முதலியவற்றைச் செய்து அவனை உண்பித்தாள். அவன் தாம்பூலந்தரித்து ஊஞ்சற்பலகையில் உட்கார்ந்திருந்தான். அடுத்த வீட்டு சாமாவையரும் தமது இயற்கை யலங்காரத்தோடு வந்து ஊஞ்சற் பலகையை அழகுபடுத்தினார். யாவரும் உல்லாசமாக ஊர் வம்புகளைப் பேசிய வண்ணம் இருந்தனர். அப்போது சாமாவையர் பெருந்தேவியம்மாளை எதிர்த்து வாதம் செய்பவரைப் போல் நடித்து, “பெருந்தேவி! உனக்குக் கோபம் வந்தால் வரட்டும்; நீ இதனால் என்னோடு பேசாவிட்டாலும் பரவாயில்லை. நீ எங்கேதான் தேடிக் கலியாணம் செய்தாலும் மேனகாவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/57&oldid=1248124" இலிருந்து மீள்விக்கப்பட்டது