பக்கம்:மேனகா 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மேனகா

போன்ற நல்ல குணவதி உனக்குக் கிடைப்பது கடினம். இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மற்ற வீடுகளில் நாட்டுப் பெண்கள் இருக்கும் ஒழுங்கைப் பார்த்தால் இவளை நாம் கோயிலில் வைத்தே பூஜை செய்யவேண்டும். அற்பங்களெல்லாம் தலைகால் தெரியாமல் துள்ளி விழுந்து போகின்றன. அவருடைய தகப்பனார் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறாரே என்கிற அகம்பாவம் சிறிதாயினும் உண்டா? அவள் காரியம் செய்யும் திறமையும், அவளுடைய பணிவும், அடங்கிய சொல்லும், நாணமும் யாருக்கு வரும்?” என்றார்.

எதிர்பாரா அம்மொழிகளைக் கேட்ட வராகசாமியினது மனம் ஒருவாறு கலக்கம் அடைந்து, அதற்கு இன்னவிதம் பதில் சொல்வதென்பதை அறியாமல் அவன் பேசாமலிருந்தான். சாமாவையரின் சொல் அவனது மனதில் ஒருவித ஆத்திரத்தை உண்டாக்கியது. ஆனாலும், விஷயம் உண்மையாகவே தோன்றியது. அப்போது பெருந்தேவி, “அது நிஜந்தான் என்னவோ அவளுடைய அப்பன் லோபித்தனம் செய்கிறான் என்கிற ஒரு வெறுப்பைத் தவிர வேறென்ன இருக்கிறது? அவள் பேரில் நமக்கென்ன வர்மம்? அவள் தங்கமான பெண், அவளுடைய பொறுமைக் குணம் ஒன்று போதுமே! பாவம் நாம் அயலார் பெண்ணின்மேல் வீண்பழி சுமத்தினால் பொய் சொன்ன வாய்க்கு போஜன மற்றுப்போம்” என்றாள்.

சாமா:- அவளுடைய தகப்பனார் நம்முடைய விஷயத்தில் என்ன லோபித்தனம் செய்தார்? அவருடைய குடும்பக் கவலைகள் ஆயிரமிருக்கும். தமது சொந்தக்காரியத்தில் அவர் செட்டுக்காரரா யிருக்கலாம். அத்ற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய காரியங்களை யெல்லாம் அவர் சொன்னபடி ஒரு குறைவுமின்றிச் செய்துவிட்டார் அல்லவா? நமக்கு வேறென்ன வேண்டும்?

கோம:- தங்கந்தானென்ன பொல்லாதவளா? அவள் நம்மிடத்தில் எவ்வளவு அந்தரங்க வாஞ்சையோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/58&oldid=1248125" இலிருந்து மீள்விக்கப்பட்டது