பக்கம்:மேனகா 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மேனகா


“பெண்ணோ வொழியா பகலே புகுதா
தெண்ணோ தவிரா இரவோ விடியா
துண்ணோ ஒழியா உயிரோ வகலா
கண்ணோ துயிலா விதுவோ கடனே.”

என்னத் தோன்றி, நீங்காமல் வதைத்து வந்த அவளுடைய விசனக் குன்று தீயின் முன்னர் இளகும் வெண்ணெயெனத் தன் கணவனது களங்கமற்ற உண்மை அன்பினால் இளகி இருந்தவிடம் தெரியாமல் பறந்தது. ஒரு வருஷத்திற்கு முன் அவள் தஞ்சைக்குச் சென்ற தினத்திற்கு முந்தய நாளில் சுருட்டி வைத்த வெல்வெட்டு மெத்தையை அப்போதே பிரித்தாள். அவளுடைய தேகம் அன்றைக்கே பட்டுப்புடவையைக் கண்டது. சடையாகப் போயிருந்த அவளுடைய அழகிய கூந்தல், சென்னைக்குப் புறப்படு முன்னரே எண்ணெயையும், புஷ்பத்தையும் ஏற்றுக்கொண்டது. அவள் ஒரு வருஷமாக ஊண் உறக்கமின்றி கிடந்து மெலிந்து வாடி இருந்தாள் ஆதலால் அவளது தேகத்தில் இளமை, நன்னிலைமை, தேகப் புஷ்டி முதலியவற்றால் உண்டாகும் தளதளப்பும், கொழுமையும், உன்னத வாமமும் அவளிடம் காணப்படவில்லை ஆனாலும், தன் கணவனை அடையப் போகும் பெரும் பாக்கியத்தை யுன்னி அவள் அடைந்த மனக் கிளர்ச்சியும், பெரு மகிழ்வுமே அவளை தாங்கிக் கொணர்ந்தன. நெடுங்காலமாய் பிரிந்திருந்த தன் மணாளர் அன்றிரவு தன்னிடம் தனிமையில் வந்து பேசுவாரோ, பேசினாலும் எவ்விதம் பேசுவாரோ என்று பெரிதும் கவலைகொண்டு அவள் உள்ளுற மனமாழ்கி யிருந்தாள். அதற்கு முன் நடந்தவைகளை மறந்துவிடுவதாகக் கடிதத்தில் எழுதி இருந்தவாறு அவர் யாவற்றையும் மறந்து தன்னோடு உண்மை அன்போடு மொழிவாரோ அன்றி மறுபடியும் யாவும் பழைய கதையாய் முடியுமோ வென்று அவள் பலவாறு நினைத்து நினைத்து இரவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தாள். அத்தகைய சகித்தலாற்றா மனநிலைமையினால், அவளது மெல்லிய மேனி ஜூர நோய் கொண்டு வெப்பமடைந்தது; பூக்களோ மோப்பக்குழையும்; பூவையரின் வதனமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/66&oldid=1248133" இலிருந்து மீள்விக்கப்பட்டது