பக்கம்:மேனகா 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்வதன் முன் பதுங்குதல்

51

செய்தன. உள்ளம் பொங்கிப் பொருமி யெழுந்தது. அவன் இன்பமோ, துன்பமோ, அழுகையோ, மகிழ்வோ வென்பது தோன்றாவாறு வீங்கிய மன வெழுச்சியைக் கொண்டான். கனவிற் கள்வரைக் கண்டு அஞ்சி யோட முயல்வோர் கால்கள் தரையினின்று எழாமையால் வருந்துதலைப் போல அவன் சொல்ல விரும்பிய சொற்கள் தொண்டையினின்று வெளிவராமையால் அவன் வருந்திச் சிறிது நேரம் தவித்தான். “மேனகா! உன்னுடைய நல்ல குணத்தை உள்ளபடி அறிந்து கொள்ளாமல் மூடனாய் நான் உன்னை எவ்வளவோ வருத்தினேன்! நான் செய்த கொடுமைகளை நினைக்க என் மனமே பதறுகிறது! எவ்வளவு படித்தாலும் என்ன பயன்? மாற்றில்லா மணியான மனைவியை அன்பாக நடத்தும் திறமையற்ற பெருந் தடியனானேன். உன்னிடத்தில் அழகில்லையா? குணமில்லையா? நன்னடத்தை யில்லையா? நீ கற்பிற் குறைந்தவளா? காரியம் செய்யும் திறமையற்றவளா? நீ எதில் குறைந்தவள்? உன்னை நான் ஏன் இவ்விதம் கொடுமையாக நடத்தவேண்டும்? உன்னுடைய பெற்றோரையும் உன்னையும் இப்படி ஏன் துன்ப சாகரத்தில் ஆழ்த்த வேண்டும்? சகல சுகத்தையும் காமதேனுவைப் போலத் தரும் தெய்வ ரம்பையாகிய உன்னை நான் இவ்வொரு வருஷமாக நீக்கி வைத்தது என்னுடைய துர்பார்க்கியமே யொழிய வேறில்லை. பாவியாகிய எனக்கு நற்பொருள் தெரியவில்லை. தானே தேடிவரும் இன்பத்தை அநுபவிக்கப் பாக்கியம் பெறாத அதிர்ஷ்ட ஹீனனானேன். போனது போகட்டும்; உன் விஷயத்தில் நான் இது வரையில் லட்சம் தவறுகள் செய்து உன்னை வதைத்தும் வைதும் கடின மனத்தனாய்த் துன்புறுத்தினேன். அவைகளை யெல்லாம் நீ இன்றோடு மறந்துவிடு. இனிமேல், உன் மனம் வருந்தும்படி நான் எந்தக்காரியமும் செய்வதில்லை. இது சத்தியம்” என்றான். அப்போது அவனுடைய கண்களினின்று கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவளை அவன் அன்போடு இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான். அவளும் ஆனந்தத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/69&oldid=1248136" இலிருந்து மீள்விக்கப்பட்டது