பக்கம்:மேனகா 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மேனகா


உடனே பெண்டீரிருவரும் வண்டியை விடுத்திறங்கினர். சாமாவையரும் இறங்கினார். மாளிகையின் வாசலிலிருந்த ஒரு மகம்மதியனைப் பார்த்த சாமாவையர், “பியூன்! ஐயா எங்கே?” என்றார். அவன், “உள்ளே இருக்கிறார்; போங்கள்” என்று மரியாதையாக மறுமொழி கூறினான்.

சாமா:- சீக்கிரம் வாருங்கள்; நாழிகையானால் கதவைச் சாத்தி விடுவார்கள் - என்றவண்ணம் உட்புறம் நுழைந்தார். பெண்டீரிருவரும் அவரைத் தொடர்ந்து உட்புறம் நுழைந்தனர். அவர்கள் உட்புறமிருந்த சில அகன்ற அறைகளைக் கடந்து செல்ல, எதிரில் மேன் மாடப் படிகள் தோன்றின. அவர்கள் அவற்றின் வழியாக ஏறிச்சென்றனர். எங்கும் மனிதரே காணப்படவில்லை. அவர்கள் மேன்மாடத்தை அடைந்தபின் அங்கிருந்த பல நெருக்கமான அறைகளைக் கடந்து மென்மேலும் நடந்தனர். ஒவ்வோர் அறையிலும், மின்சார விளக்குகள் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. பளபளப்பான புதிய நாற்காலிகளும், அழகிய சோபாக்களும், நிலைக் கண்ணாடிகளும், பூத்தொட்டிகளும், எங்கும் நிறைந்து காணப்பட்டன. அழகான உயர்ந்த இரத்தின கம்பளங்கள் தரை முழுவதும் விவரிக்கப்பட்டிருந்தன.

சாமாவையர், “பெருந்தேவி! இதுதான் வேஷம் போட்டுக்கொள்ளு மிடம். இது எவ்வளவு அழகா யிருக்கிறது பார்த்தாயா? எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டு முன்னால் போய்விட்டார்கள்” என்றார்.

பெரு :- கூத்தாடிகள் அடுத்த அறையிலிருப்பார்கள். இப்படியே வர எனக்கு நிரம்பவும் வெட்கமாக இருக்கிறதப்பா; நானும் மேனகாவும் வாசல்பக்கமாக வருகிறோம் - என்று கூறிய வண்ணம் அப்படியே நின்றாள்.

சாமா:- சரி; அப்படியானால் நீங்கள் இவ்விடத்திலேயே இருங்கள், நான் வராகசாமியிடம் போய் டிக்கட்டுகளை வாங்கி வருகிறேன். நாம் முன்பக்கமாகவே உள்ளே போகலாம் - என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/82&oldid=1249158" இலிருந்து மீள்விக்கப்பட்டது